பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/491

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

481

ஏத்துவதே நல்ல நெறியென்று துணிந்து நின்றோம்; அப்பால் என்றும் பிறழாமல் எம் தந்தையாராகிய சிவபெருமானுக்கு ஆளாகித் தொண்டு செய்யப் பெற்றோம். அவ்வாறு பெற்ற இந்த நிலைதானோ, எம்முடைய சிந்தையாருக்கு உள்ள செருக்குக் காரணம்?"

படர்சடையான் பாதங்கள் பணிந்தும் போதால் அணிந்தும் என்று கூட்டுக; இடைநிலை விளக்கு. படர் சடையான்—விரிந்த சடையை உடையவன். படர் சடையையும் பாதங்களையும் கூறியதனால் அவன் திருக்கோலம் முழுவதும் கண்டவராயிற்று. கேசாதி பாதக் காட்சி கிட்டியது. போது அலரும் பருவத்துள்ள பெரரும்பு. “உன்னைச் சிங்காரித்து உன் அழகைப் பாராமல், என்னைச்சிங் காரித் திருந்தேன் பராபரமே!" என்பார் தாயுமானவர். இறைவனுக்கு அலங்காரம் செய்து கண்குளிரக் கண்டு மகிழ்வது அவனுக்கு ஆட்செய்யப் பெற்றவர்களின் இயல்பு.

பணிந்தபோது பக்தி அரும்பியது; இறைவன் பாதங்களை அர்ச்சித்தபோது அது அலர்ந்தது; அணிந்தவரை ஏத்தத் துணிந்தபோது அது காயாயிற்று; அவர்களோடு சேர்ந்து ஆட்செய்யப் பெற்றபோது அது கனிந்தது.

முதலில் நெருக்கமின்றி இருந்தமையால் படர் சடையான் என்று ஒருமையால் சொன்னவர், தொண்டர் கூட்டத்தோடு சென்று நெருங்கி ஒட்டுறவு இறுகவே, தமக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பின் முதிர்ச்சியினால், 'எந்தையார்' என்று உறவின் முறையைப் பன்மை வாசகத்தில் சொன்னார். ஆட்செய்யப் பெற்ற இது—அடிமையாக நின்று தொண்டு செய்யும் பேறுபெற்ற இந்த இயல்பு. இது கொலோ: ஓ. வினாப்பொருளைத் தருதலின், கொல், அசையாக நின்றது. இது என்றது ஆட்செய்யப் பெற்றதைக் குறித்தது. இதுதான் என்று சொல்லாமல் இதுகொலோ என்றது ஐயத்தால் சொன்னதன்று; இதுதான் என்றால் அகங்காரம் தொனிக்கும் அதனால் 'இதனால் தானோ?'என்று பராமுகமாகச் சொன்னார்.

நா—31