பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/493

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81. திருவடியின் ஆற்றல்


காரைக்காலம்மையார் இப்போது இறைவன் திருவடிப் பெருமையை நினைத்துப் பார்க்கிறார். அது அடியவர்களுக்கு இன்ப வீடாக இருப்பது. அல்லாதவர்களின் கொடுமையை அடக்கும் ஆற்றலுடையது. அந்தப் பராக்கிரமத்தை எண்ணுகிறார்.

திருவின் கேள்வன் திருமால். அவன் திருவுடையவன். அதனால் சிறந்த தகுதியுடையவன். அவன் இறைவனுடைய திருவடியைக் காணமுடியாது. உலகத்தைப் படைக்கும் பிரமதேவனும் காண்பதற்கரியது அந்த அடி.

சுந்தரத் திருவடிகளைக் காண வேண்டுமென்று திருமால் வராக உருவெடுத்து முயன்றான். உலகத்தை அகழ்ந்து போனான். அவனால் காண முடியவில்லை. அவனால் காண முடியாதபோது அவனைக் காட்டிலும் ஆற்றல் குறைந்த அயன் எங்கே காணப்போகிறான்?

அவற்றைக் காணவேண்டும் என்ற அவாவினால் எவ்வளவோ முயன்று பார்த்தும் அவர்களால் முடியவில்லை யாதலால், "எம்பெருமானே! உன் திருவடியைக் காணலாம் என்ற அகந்தையோடு முயன்றோம். எங்கள் ஆற்றலுக்கு அகப்பட்டவை அல்ல அவை என்பதை உணர்ந்தோம். எங்கள் அகந்தையைப் பொறுத்தருள வேண்டும்" என்று பலவாறு சொல்லி அவர்கள் அரற்றினார்கள். பிறகு இறைவன் அவர்கள் கண் காணும்படி, சோதி வடிவத்தை மாற்றி அவர்கள் முன் நின்றான். அப்போது வீழ்ந்து பணிந்து மகிழ்ந்தார்கள்; அந்தத் திருவடியின் பெருமையைப் புகழ்ந்து துதித்தார்கள்.