பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/495

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

485

நகர முடியவில்லை. இறைவனுடைய இடமாகிய அதை மீறி அதனால் செல்ல முடியவில்லை. தன் விமானப் பயணத்துக்குத் தடையாக இருந்த கைலாசத்தைத் தூக்கி எறிந்துவிட வேண்டுமென்று எண்ணினான் அவன்.

போகும் வழியில் ஏதேனும் கல் தடுத்தால் அதைத் தூக்கி எறிகிறோமே; அது போலச் செய்துவிடலாம் என்று எண்ணினான். விமானத்திலிருந்து கீழிறங்கினான். கைலாச மலையைத் தன் தோள்வலியால் தூக்கி எறிந்து விடலாம் என்ற செருக்கு உண்டாக தன்னுடைய இருபது திண்டோள்களையும் கொண்டு அதைத் தூக்க முயன்றான். மலை சிறிதே நகர்ந்தது. கீழே தோள்களைப் புகுத்தி மேலும் தூக்கலானான்.

செருக்கினால் வெற்பு எடுத்த
திண்தோள் அரக்கனையும்.

அப்போது இறைவன் பார்த்தான். தன் திருவடியை மலை மேல் சிறிதே அழுந்த ஊன்றினான். பொறியிலே சிக்கிய எலியைப் போல இராவணன் நசுங்கிப் போனான். பிறகு தன் கைகளில் ஒன்றையே வீணையாக வைத்துச் சாமகானம் பாட இறைவன் அவனுக்கு அருள் சுரந்தான்.

இராவணன் மலையை எடுத்தபோது அவ்விடத்தில் அந்தத் திருவடிகள் அவனை நசுக்கின. காலனையே உதைத்து வென்ற அந்தத் திருவடிகளுக்கு இது எம்மாத்திரம்? இராவணனுடைய செருக்கை அழித்து நின்றன அத்திருவடிகள்.

அரக்கனையும் முன் நின்று அடர்த்த.

காலனை உதைத்து வென்ற பராக்கிரமத்தையும் செருக்குற்ற இராவணனை அடர்த்த ஆற்றலையும் ஒருங்கு இணைத்துச் சொல்கிறார் அம்மையார்.