பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/496

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

486

செருக்கினால் வெற்புஎடுத்த
எத்தனையோ திண்தோள்
அரக்கனையும் முன்நின்று
அடர்த்த;—திருத்தக்க
மால்அயனும் காணாது
அரற்றி, மகிழ்ந்துஏத்தக்
காலனையும் வென்றுதைத்த கால்.

திருவினால் தகுதி பெற்ற திருமாலும் அயனும் காணாமல் அரற்றி, பின்பு இறைவன் அருள் செய்ததனால் மகிழ்ந்து துதி பாட, யாராலும் வெல்லற்கரிய காலனையும் உதைத்து வென்ற திருவடிகள், நம்மைவிட வலியவர் இல்லை என்ற கர்வத்தால் கைலாச மலையைத் தூக்கிய பல திண்ணிய தோள்களையுடைய அரக்கனாகிய இராவணனையும் முன்னே நின்று அமுக்கின.

[தனக்குப் பல திண்ணிய தோள்கள் இருப்பதனால் இராவணன், 'இது நமக்கு எம்மாத்திரம்?' என்ற செருக்கை அடைந்தான். அவன் திண்ணிய தோள்கள் இருபது. அவற்றை வீணே யார் எண்ணிக் கொண்டிருப்பார்கள் என்ற எண்ணத்தால், 'எத்தனையோ திண்டோள்' என்றார். ‘அவை எத்தனையாக இருந்தால்தான் என்ன? அத்தனையையும் இறைவன் திருவடிகள் அழுந்திவிட்டன’ என்றார்.

அரக்கனையும்: இறந்தது தழீஇய எச்சவும்மை: எண்ணும்மையாகவும் கொள்ளலாம். உயர்வு சிறப்பும்மையாகவும் கொள்ள இடம் உண்டு. முன் நின்று அடர்த்த; இரண்டு திருவடிகளையும் எண்ணிப் பன்மையால் சொன்னார். மாலும் அயனும் என்று உம்மையை மாலுக்கும் கூட்டுக; மாலோடு சேர்ந்த அயனும் என்று கொண்டு உயர்வு சிறப்பும்மையாகக் கொள்வதும் பொருந்தும்.

காணாமையால் முதலில் அரற்றினார்கள்; பிறகு இறைவன் திருவருளைப் பெற்று மகிழ்ந்து ஏத்தினார்கள்.