பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/499

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

489

தேவாரத்திலும் பிற பாடல்களிலும் திரிபுர சங்காரத்தைப் பற்றிய செய்தி வரும்போது வேறு வகையாகவும் இருப்பதுண்டு. இறைவன் தன் நெற்றிக் கண்ணை விழித்துத் திரிபுரங்களை எரித்தான் என்றும், அம்பை எய்து அழித்தான் என்றும் வரும். இவ்வாறு வேறுபட்டு இருப்பதற்கு ஒரு காரணம் சொல்வதுண்டு. ஒவ்வொரு கற்பத்திலும் திரிபுர சங்காரம் நடைபெறுகிறதாம். அந்த அந்தக் கற்பத்தில் வெவ்வேறு முறைகளை இறைவன் ஆளுகிறானாம். ஆதலால் இவற்றைக் கற்ப பேதம் என்று சொல்வது வழக்கம்.

இறைவனுடைய திருவிளையாடல்களைச் சொல்லும் பக்தர்களுக்கு அவன் திரிபுர சங்காரம் செய்தான் என்ற மையக் கருத்தே நினைவில் இருக்கிறது. எவ்வாறு அழித்தான் என்பதை நினைவு கொள்வதில்லை. எப்படியானாலும் திரிபுரங்கள் அழிந்தன என்ற கருத்தில் வேறுபாடு இருப்பதில்லை. அந்த இயல்பே வேறு வேறு முறைகளை அவர்கள் சொல்வதற்குக் காரணம் என்று கொள்வதே பொருத்தமாக இருக்கும்.

காரைக்காலம்மையார், இப்போது பார்க்கப் போகும் பாட்டில், இறைவன் திரிபுரங்களை அம்பால் எய்தான் என்று சொல்கிறார்.

'பார்ப்பதற்கு அழகாக இருந்த மூன்று அரணங்களை உடையவர்களின் வலிமையை அடக்குவதற்கு இறைவன் அந்த அரணங்களை அழித்து, அவற்றின் தலைவர்களாக இருந்த அசுரர்கள் தம் ஊக்கம் குலைந்து வருந்தும்படி செய்தான். வெவ்விய தீயைக் கக்கும் அம்பை எய்து அந்தச் செயலைச் செய்தான்' என்கிறார்.

கோல
அரணார் அவிந்து அழிய வெந்தீஅம்பு எய்தான்.

அந்தப் பெருமானுடைய பாததாமரைகளைப் பற்றிக் கொண்டு வாழ்கிறார்கள் அன்பர்கள்; அவற்றை இடைவிடாமல் நினைக்கிறார்கள்.