பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

அது போகவேண்டுமானால் குறைவிலா நிறைவாகிய ஆண்டவனை அணுகவேண்டும்.

“தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்
 மனக்கவலை மாற்றல் அரிது”.

என்று திருவள்ளுவர் சொல்லவில்லயா?

'நம் குறையை அவன் தீர்ப்பான், இவன் தீர்ப்பான் என்று யார்யாரையோ நம்பும் வழக்கம் நம்மிடம் இருக்கிறது. திரெளபதியைத் துச்சாதனன் மானபங்கம் செய்ய முற்பட்டான். அவளுக்குப் பாதுகாப்பாகக் கணவர் ஐவர் இருந்தனர். அப்போது அவர்களை நம்பிப் பயன் இல்லாமல் போயிற்று. அவையிலிருந்த உறவினர்களை நம்பினாள். அவர்களும் செயலற்றவர்களாக இருந்தார்கள். பெரியவர்கள் இருந்தார்கள். அவர்களை நோக்கி முறையிட்டாள். அவர்களாலும் அவளுக்கு நலம் செய்ய முடியவில்லை. தன் கையே. தனக்கு உதவி என்று இரு கைகளாலும் ஆடையைப் பற்றிக் கொண்டாள். அப்போதும் துச்சாதனனின் முரட்டுத்தனத்தை மாற்ற முடியவில்லை. கடைசியில், நீதான் சரண் என்று கண்ணனையே புகலாக அடைந்து கை குவித்தாள். அவன் அப்போது அங்கே இல்லை. இல்லையென்றா நினைப்பது? அவன் இல்லாத இடம் ஏது? இவனையன்றி வேறு புகல் இல்லை என்ற உறுதியோடு,'கோவிந்தா' என்று அரற்றியபோது அவளுக்குப் பாதுகாப்புக் கிடைத்தது. ஆடை நீண்டுகொண்டே போயிற்று. துச்சாதனன் கைகள் சலித்தன.

யாரிடம் மனப்பூர்வமாக முறையிடவேண்டும் என்பது தெரிந்தபோது பாஞ்சாலிக்கு உதவி கிடைத்தது. அவன்தான் அப்படி உதவி செய்யமுடியும்.

இதை இறைவனுடைய அன்பர்கள் நன்கு அறிவார்கள்.