பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/502

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

492

வார்கள். மற்றவர்களோ பிராரப்த வினையை அநுபவித்துக் கொண்டே புதிய வினைகனை ஈட்டுவார்கள். அந்த வினைத் தொகுதிக்கு ஆகாம்யம் என்று பெயர்.

இறைவனுடைய அடியவர்கள் இந்தப் பிறவிக்குக் காரணமான வினையை அனுபவித்தாலும் அவனுடைய திருவடியைப் பற்றிக் கொண்டு அன்பு செய்வதால் புதிய வினைகளை ஈட்டமாட்டார்கள். அவர்கள் இந்தப் பிறவியையே இறுதிப் பிறவியாகக் கொண்டு வாழ்வதனால், அடுத்த பிறவிகளில் அனுபவிப்பதற்கு உரிய சஞ்சிதம் அவர்களளவில் பயனற்றுப் போகிறது. மற்றவர்களோ புதிய வினைகளையும் ஈட்டி அந்த மூட்டையைப் பெருக்கிக் கொள்கிறார்கள்.

ஒரு செல்வருடைய புதல்வன் வீண் செலவு செய்து பெரிய கடனாளியாகி விடுகிறான். அவனுடைய தந்தை அவனுக்கு இரங்கி, "இனியாவது புத்தியாகப் பிழைத்துக் கொள்" என்று சொல்லி, ஒரு தொகையைக் கொடுத்து, “இதை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்து கடனில் ஒரு பகுதியைத் தீர்த்துவிடு” என்று சொல்லி அனுப்புகிறார். அவன் வியாபாரத்தில் ஈடுபட்டுத் தந்தை வரையறுத்த கடனை அடைத்து விடுகிறான்; ஆனால் புதிய கடனை வாங்குகிறான். அவனுக்கு என்றாவது உய்தி உண்டாகுமோ?

அறிவாளியான பையன் ஒருவனுக்கு அவன் தந்தை இவ்வாறே செய்கிறார். அவன் தன் தந்தையின் அறிவுரைப் படியே நடந்து, தந்தை வரையறுத்த கடனைத் தீர்த்துவிட்டு, புதிய கடன் ஏதும் வாங்காமல் வியாபாரம் செய்கிறான், தந்தை அவனுடைய பழைய கடனை, 'வஜா' செய்ய ஏற்பாடு செய்கிறார்.

இந்த இரண்டு உதாரணங்களும் அடியாரல்லாதவர்களுக்கும் அடியார்களுக்கும் உள்ள இயல்பை விளக்குவன.

காலனை வென்று கடுநரகம் கைகழன்ற அடியவர்கள் தம்மை நலிவதற்கு உரிய சஞ்சிதம், ஆகாம்யம் என்னும்