பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/504

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

494

செஞ்ஞாயிறு என்பது போல. கைகழன்றோம். அதன் பக்கத்தில் சாராமல் விலகி நின்றோம். மேலை என்பது இறந்த காலத்தையும் எதிர்காலத்தையும் குறிக்கும். இறந்தகால வினையாகிய சஞ்சிதத்தையும் வருங்கால வினையாகிய ஆகாமியத்தையும் அறுத்து விட்டோம் என்றார். வினைகளையும் வேரில் அறுத்துவிட்டோம், வேரோடு அறுத்துவிட்டோம் என்று இருவகையாகவும் கொள்ளலாம். கோலம் : பார்வைக்கு அழகாக இருந்தாலும் செயலால் கொடுமையுடையது என்பது குறிப்பு. 'அரணார் அவிந்தழிய' என்பதற்கு ‘திரிபுராதிகள் இறந்து போக’ என்று பொருள் செய்தல் பொருந்தாது. இறைவன் திரிபுரங்களை அழித்தானேயன்றி அவற்றின் தலைவர்களை அழிக்கவில்லை. அவர்களைத் திருத்தித் தன் தொண்டில் ஈடுபடச் செய்தான். ஆதலின், தம் ஊக்கம் கெட்டு இரங்க என்று பொருள் கூறப்பட்டது.

அம்பில் வாயு, அக்கினி, திருமால் மூவரும் இருந்தனர் என்பது புராண வரலாறு. எரிப்பதற்குக் காரணமானது அக்கினியாதலின் அதை அடையாக்கி வெந்தீ அம்பு என்றார். முப்புரங்களையும் எரிக்கும் ஆற்றலும் வெம்மையும் உடையதாதலின் ‘வெந்தீ’ ஆயிற்று. தீயையுடைய அம்பு. கையை நோக்கத் தீயம்பு தெரிந்தாலும் திருவடியை நோக்கத் தாமரையாக இருக்கும் என்றார். சார்தலாவது இடைவிடாது நினைத்தல்.]

இறைவனின் அடியார்களுக்கு யமபயமும் நரகாவஸ்தையும் பிறவிக்குக் காரணமான வினைகளும் இல்லாமல் ஒழியும் என்பது கருத்து.

அற்புதத் திருவந்தாதியின் 81-ஆவது பாட்டு இது.