பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/505

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83. இறைவன் திருச்சடை


இறைவனுடைய திருவடியைப்பற்றிப் பாடிய காரைக்காலம்மையார் இப்போது அவனுடைய திருமுடியைப் பார்க்கிறார். அவனுடைய திருக்கோலத்தைக் கண்டு கண்டு அப்பெருமாட்டியாருக்கு அவனுடைய திருமுடியில் விழுதுவிட்டது போல நீண்டிருக்கும் சடாபாரத்தில் கண்கள் நிலவுகின்றன. திருவடிகள் எவ்வாறு நல்லார்க்கு நல்லனவாகவும் அல்லார்க்கு அல்லனவாகவும் இருக்கின்றனவோ, அவ்வாறே திருமுடியிலுள்ள சடைகளும் உள்ளன என்று சொல்லவருகிறார்.

சிவபெருமானை நன்றாகத் தியானித்து அவன் திருவுருவத்தை நுட்பமாகக் கவனித்தால் அவனுடைய மின்னலைப் போல விளங்கும் சடைகள் தோன்றுகின்றன. அவன் தீவண்ணனாக இருக்கிறான். அவனுடைய ஒளிக்கு முன்னர் எந்த ஒளியும் மங்கிவிடுகிறது. கிரணங்கள் விட்டு விளங்கும் செய்ய கதிரவனுடைய பேரொளியும் அவன் திருமுன் சாய்ந்து மழுங்குகின்றது.

நேர்ந்துஉணரின்
தாழ்சுடரோன் செங்கதிரும் சாயும்
தழல்வண்ணன்

ஆக அவன் தோற்றம் அளிக்கிறான். அவனுடைய வீழ்ந்து தொங்கி மின்னல் என்று உவமை சொல்லும்படி அமைந்த, சடை எப்படி இருக்கிறது?

வீழ்சடையே என்று உரைக்கும் மின்.