பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/506

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

496

மின்னல் ஒரு கணம் தோன்றி உடனே மறைவது. இந்த மின்னலோ அவ்வாறு மறையாமல் நின்று காட்சி தருகின்றது. பார்ப்பவர்களுடைய இயல்புக்கு ஏற்றபடி அது தோன்றுகின்றது.

இறைவனைச் சார்ந்து வழிபட்டு அன்பு செய்பவர்களுக்கு அந்தச் சடைகள் அழகாக இருக்கின்றன. பொன் கொழுந்து இட்டால் எப்படி இருக்குமோ அப்படி இலங்குகின்றன. இறைவன் திருமேனி பொன்வண்ணம் உடையது. "பொன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலகும்” என்று பொன்வண்ணத் தந்தாதி சொல்கிறது. இந்தப் பொன்வண்ணத் திருமேனி கொழுந்து விட்டது போல இறைவன் சடைகள் தோன்றுகின்றன. நெருப்பின் கொழுந்து மேல் நோக்கியிருக்கும். இறைவன் தழல் வண்ணன். அந்தத் தழற் பிழம்பின் கொழுந்துகள் மேலே தோன்றுகின்றன.

அவை அன்பர்களுக்குப் பொற்கொழுந்தைப் போல விளங்குகின்றன.

சார்ந்தார்க்குப் பொற்கொழுந்தே
ஒத்து இலங்கி.

பொன்னைக் கண்டவர்கள் அதைக் கைக்கொண்டு இல்லத்தே பொதிந்து வைப்பார்கள். இந்தப் பொன்னையும் பொற்கொழுந்தையும் தரிசித்த அன்பர்கள் அவற்றைத் தம் உள்ளத்தே போற்றி வைக்கிறார்கள். பொன்னைப் படைத்தவர்கள் அதைக் கொண்டு வேண்டிய பொருள்களையெல்லாம் பெற்றுக் கொள்ள முடியும். அப்படியே இந்தப் பொன்னைத் தம் அகத்தே கொண்டவர்களுக்கு எல்லாம் கிடைக்கும். அவர்களுக்கு ஒன்றலும் குறைவு இராது.

பொன்னைப் படைத்தவர்களுக்கு, நாம் எது வேண்டுமானாலும் பெறலாம் என்ற பெருமிதம் இருக்கும். இறைவனென்னும் பொன்னை அகத்தில் அடக்கினவர்களுக்கும் அத்