பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/507

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

497

தகைய பெருமிதம் இருக்கும். அந்தப் பெருமிதத்தைத்தான், “சிந்தையார்க்கு உள்ள செருக்கு” (79) என்று முன் ஒரு பாட்டில் சொன்னார்.

பொன்னைப் படைத்தவர்களுக்கு இரும்பு முதலிய பிற உலோகங்கள் மதிப்புடையனவாகத் தோன்றுவதில்லை. அவ்வாறே அன்பர்களுக்கு இறைவனையன்றி மற்றவர்களிடத்தில் உள்ளம் செல்லாது. எவ்வளவு சிறந்த பதவியில் இருப்பவர்களேனும் யாவரும் இறைவனினும் தாழ்ந்தவர்களே என்ற உண்மை அவர்களுக்குப் புலனாகும். அவனைச் சிந்தையிலே வைத்து வாழ்பவர்களுக்கு, என்றும் இறவாத அந்த மெய்ப்பொருளின் முன் மற்றவையெல்லாம் மதிப்பற்றனவாக, அழிவுடையனவாக தோன்றும்.

ஆனால், இறைவனைச் சாராது நிற்பவர்களுக்கு இந்த அருமைப்பாடு தெரியாது. அவர்கள் இறைவனிடம் பொருந்தி உணராதவர்கள். அவனை நேர்ந்து உணர்பவர்களுக்குத்தான் இறைவனுடைய மதிப்புத் தெரியும்.

பொன்னைத் தேடி ஈட்டும் வகை தெரியாதவர்கள் இரும்பையும் தகரத்தையும் பித்தளையையும் சேர்த்து வைத்துக்கொண்டு அவற்றாலே அற்பமான திருப்தியை அடைபவர்களைப் போல, இறைவனிடம் உள்ளம் செலுத்தாதவர்கள் உலகியற் பொருள்களிலே பற்று வைத்து, அவற்றுக்காக உழைத்து, அவற்றைச் சேமித்து வைத்துப் பாதுகாப்பார்கள்.

இறைவனைச் சார்ந்து அன்பு செய்து அவனுடைய திருக்காட்சியிலே ஈடுபட்டு நிற்பவர்களுக்கு அவன் பொன்னையும், அவன் சடைகள் பொற்கொழுந்தையும் ஒத்து இலங்குவதைச் சொன்ன அம்மையார், இறைவனைச் சாராதவர்களுக்கு அவை எப்படித் தோன்றுகின்றன என்பதையும் சொல்கிறார்.

அவனைச் சாராமல், அவன் அருமையை உணராமல் போகிறவர்களே பலர். அவர்கள் ஏதேதோ பொருளை நாடி

நா—32