பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/509

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

499

பொருந்தி உணர்ந்தால் கிரணங்கள் தங்கும் சூரியனுடைய சிவந்த கதிர்களும் மழுங்கிச் சாய்வதற்குரிய தழல் போன்ற வண்ணமுடைய சிவபெருமானுடைய, தொங்கும் சடை என்று சொல்லும் மின்னல்களானவை இறைவனை அணுகி அன்பு செய்பவர்களுக்குப் பொன்னின் கொழுந்தைப் போலத் தோன்றி, அவ்வாறு அவனைச் சாராமல் விலகிச் செல்பவர்களுக்கு நெருப்புக் கொடியின் தன்மையை உடையனவாகும்.

[சார்ந்தார்—-இறைவனை இடைவிடாமல் தியானித்துச் சார்ந்த அன்பர்கள். பொற்கொழுந்து — பொற்பிழம்பின் மேற்பகுதி சாராது போந்தார்—இறைவனை அணுகாது விலகிச் செல்பவர்கள். தீக்கொடி-நீண்டு சுடர்விடும் நெருப்பு; தீநாக்குகள். பெற்றிய—தன்மையை உடையன. நேர்ந்து—பொருந்தி; இறைவனைச் சார்வதற்குரிய தகுதியைப் பெற்று. தாழ்சுடரோன்—வானத்தில் தங்கும் கதிரவன். அவன் தழல்வண்ணனாக இருப்பினும் அவன் ஒளி கதிரவன் ஒளியையும் மங்கச் செய்கிறது. சாய்தல்—தாழ்ச்சி அடைதல். வீழ்சடை—தொங்கும் சடைகள். மின்—மின்னல்கள்; பால்பகா அஃறிணைப் பெயர்.

மின் ஒத்து இலங்கி, பெற்றிய என்று முடிக்க]

இறைவன் திருச்சடை அன்பர்க்கு இனிதாகவும் மற்றவர்களுக்கு இன்னாததாகவும் தோன்றும் என்பது கருத்து.

இது அற்புதத் திருவந்தாதியில் அமைந்துள்ள 82-ஆவது பாட்டு.