பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/510

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84. இரண்டு குன்றுகள்


இறைவன் பல வகையான திருக்கோலங்களை அவ்வப்போது எடுத்துக் கொண்டு, அந்தத் திருக்கோலங்களுக்கு உரிய தனி இலக்கணங்களுடனும் திருநாமங்களுடனும் தோன்றுகிறான். சோமாஸ்கந்தர், நடராஜர், தட்சிணாமூர்த்தி, இடபாரூடர் என்பவை அவ்வாறு திருவுருவம் கொண்ட வடிவங்களே.

மாதிருக்கும பாதியனாக உள்ள திருவுருவம் அர்த்தநாரீசுவரக் கோலம். அப்படியே மாலிருக்கும் பாதியனாகவும் அவன் கோலம் கொண்டான். அந்த மூர்த்தியைக் கேசவார்த்தர் என்று சொல்வார்கள். ஒரு பாதி மால் கொளநிற்கும் அந்த மூர்த்தியைச் சங்கரநாராயணர் என்றும் சொல்வார்கள்.

சங்கரநயினார் கோயில் என்ற தலத்தில் சங்கரநாராயணர் சந்நிதி இருக்கிறது. இடப்பாகம் திருமாலாகவும் வலப்பாகம் சிவபெருமானாகவும் காட்சியளிக்கும் பெருமானை அங்கே தரிசிக்கலாம்.

திருமாலோடு இணைந்து நின்றும், வேறாக நின்றும் காட்சி அளிக்கிறான் சிவபெருமான். ஒரு பக்கம் சிவபெருமானுக்கு உரிய செஞ்சடையும் மற்றொரு பக்கம் கருங்குழலும் அமைந்திருக்கும்; அப்படி நின்ற கோலத்தை இப்போது காரைக்காலம்மையார் நினைக்கிறார்.

இறைவனுடைய பல வகைத் திருக்கோலங்களையும் அங்கங்களையும் பராக்கிரமங்களையும் அருள் விளையாடல்களையும் எண்ணி எண்ணி இன்புறுவது அடியார்கள் இயல்பு.