பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/511

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

501

மனத்துக்கு ஏதாவது வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அது கண்டபடி நம்மை எங்கெங்கோ இழுத்துச் செல்லும். அதற்கு இறைவனுடைய திருக்கோலங்களை நினைக்கும் பழக்கத்தை உண்டாக்கினால் அவற்றைப் பற்றியே எண்ணி எண்ணிப் பொழுதுபோக்கும்.

சுறுசுறுப்பான குழந்தை எதையாவது எடுத்து மோதித் துன்பம் அடையும். அதற்காக அதற்குப் பல விதமான பொம்மைகளைக் கொடுத்தால் அவற்றில் மனம் செலுத்தி விளையாடும். மனம் என்னும் குழந்தைக்கும் இறைவனுடைய கோலங்களை அறிமுகப்படுத்தினால் அது எப்போதும் அவற்றையே எண்ணி, வேறு தீய நினைவுகளைக் கொள்ளாமல் இருக்கும்.

இறைவனுடைய திருக்கோலத்தை வருணித்துச் சொல்லும் பாடல்களைப் படித்து உணர்வதனால் நம் மனத்துக்கு நல்ல பயிற்சி உண்டாகும். கண்டபடி திரியாமல் தெய்வீக வட்டத்துக்குள் உலாவும். அதற்காகத்தான் கோயில்களும் விக்கிரகங்களும் அமைந்திருக்கின்றன. இறைவன் அவற்றில் இருக்கிறானா என்று சிலர் கேட்பதுண்டு. எவ்விடங்களிலும் உறையும் இறைவன் அவற்றில் இருக்க மாட்டானா? ஆனால் இறைவன் எல்லா இடங்களிலும் இருப்பதை நாம் உணர்வதில்லையே! அவனை நினைப்பூட்டும் சின்னங்களைக் கண்டால் அவனையே எண்ணி வாழும் நிலை ஏற்படும். ஊருக்குச் சென்றிருக்கும் காதலனுடைய பிரிவை ஆற்ற விரும்பும் காதலி அவனுடைய படத்தை வைத்துக் கொண்டு, தன் துயரத்தை ஆற்றிக் கொள்வது போன்றது இது.

சிவபெருமான் தனியாக நிற்பவன். அவன் இப்போது திருமாலோடு மீண்டும் இசைந்து நிற்கிறான். முன்பு தன்னிடம் ஒன்றி அடங்கிய திருமாலை வெளிப்படுத்திக் காத்தல் தொழிலை அவனிடம் ஒப்பித்தான். இப்போது யாவரும் காண வடிவில் அவனோடு ஒன்றி இணைந்து சங்கர நாராயண