பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/512

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

502

னாகக் கோலம் காட்டுகிறான். அந்தக் கோலம் எப்படி இருக்கிறது?

இப்படி ஒரு வினாவை எழுப்பிக் கொள்கிறார், காரைக் காலம்மையார்.

மின்போலும் செஞ்சடையான்
மாலோடு மீண்டுஇசைந்தால்
என்போலும் காண்பார்கட்கு
என்பிரேல்.

நாம் கேட்காவிட்டாலும், நாம் கேட்பதாக வைத்துச் சொல்கிறார். நம்மை நல்ல பிள்ளைகளாக்கி, “இப்படி, இறைவன் திருக்கோலம் கொண்டால் அது எப்படி இருக்கும் என்று கேட்பீர்களானால்....” என்று தொடங்குகிறார். அதைக் கேட்ட பிறகாவது நாம் இறைவன் திருக்கோலத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்க வேண்டும்.

நாம் அவரைக் கேட்காவிட்டாலும் நமக்காக அவர் ஒரு கேள்வியை எழுப்ப அதைக்கேட்டு நாம் சும்மா இருக்கலாமா? நாம் அந்தக் கேள்வியைக் கேட்டதாக எண்ணிக்கொண்டு அம்மையார் கூறும் விடையைக் கவனிக்கத் தொடங்கலாம்.

அவர் அந்தத் திருவுருவத்தை விவரமாக வருணிக்கப் புகுந்தால் நீண்ட நேரமாகும். அதைக் கேட்க நமக்குப் பொறுமை இராது. ஆகையால் ஒர் உவமையைச் சொல்லிச் சுருக்கமாக விளக்குகிறார்.

மேருவைப் பொன்மலை என்று சொல்வார்கள். சிவபெருமான் செம்பொன் வண்ணத் திருமேனியுடையவனாதலால் அவன் பொற்குன்று போலக் காட்சி தருகிறான். திருமாலோ நீல நிறமுடையவர். அவருடைய திருமேனிக்கு நீலமணியை உவமை கூறுவர்.

“மண்ணுறு மணிபாய் உருவினவை.”