பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/517

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

507

தீ எக்காலத்திலும் இருளைப் போக்கி ஒளியைப் பரப்புவன. தீ விளக்கு வடிவத்தில் நின்று இருளைப் போக்குகிறது.

இந்த மூன்று சுடர்களுமே இறைவனுக்குக் கண்களாக அமைந்திருக்கின்றன. இந்த மூன்றும் இல்லாவிட்டால் உலகில் இருளே நிரம்பியிருக்கும். இயல்பாக இருண்டு கிடப்பது உலகம். ‘மாயிருள் ஞாலம்’, ‘இருள்தருமா ஞாலம்’ என்று இதைச் சொல்வார்கள். அந்த இருளைப் போக்குவதற்கு முச்சுடர்களும் பயன்படுகின்றன. அவை ஒளிராவிடின் உலகம் இருளில் மூழ்கும். மக்கள் கண்களைப் படைத்திருந்தாலும் இருளில் பொருள்களின் வடிவத்தையும் வண்ணத்தையும் தெரிந்துகொள்ள முடியாது. உலகத்தினர் கண் விழித்தாலும் இறைவன் கண் விழித்தாலன்றி அவர்கள் கண்கள் எதையும் காணமுடியாது. அதாவது, சூரிய சந்திர அக்கினிகள் இருந்தாலன்றி ஒளி இல்லை; கண்கள் இருந்தும் பார்க்க முடியாது.

இறைவனுடைய மூன்று கண்கள் ஒளியை உடையவை; அதே சமயத்தில் அவை வெம்மையையும் உடையவை. உலகத்துக்கு ஒளியைத் தரும்போது, சில சமயங்களில் தீயவர்களை அழிப்பதற்கு அவை பயன்படும். அப்போது அவற்றின் வெம்மை செயற்படும்.

மூன்று கண்களை உடைய சிவபெருமானுக்கு மூன்று சுடர்களே கண்களாக உள்ளன. அவை தத்தமக்குரிய இயல்போடு இறைவன் திருமுகத்தில் ஒளிர்கின்றன. அவற்றைப் பார்த்தாலே, ‘இவை மூன்று சுடர்களைப் போல இருக்கின்றனவே!’ என்று சொல்லத் தோன்றும். உண்மையை அறியாதவரைப் போல அம்மையார் சொல்கிறார். மூன்று சுடரே அவன் கண்கள் என்னாமல், அவற்றைப் போலத் தோன்றும் என்று சொல்கிறார்.

உயர்ந்து கொழுந்து விட்டு எரியும் தீ இறைவனுக்கு ஒரு கண்.