பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/520

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86. தரிசனத்தால் பெறும் இன்பம்


இறைவன் எல்லாரையும் விடப் பெரியவன். எல்லாப் பொருள்களினும் மேம்பட்ட பரம்பொருள் அவன். மேலானதென்று சிலர் நினைக்கும் எல்லாவற்றையும்விடப் பெரியவன். அதனால் அவனைப் பராபரன் என்று சொல்வார்கள்.

அத்தகைய பெருமானுடைய தரிசனம் கிடைத்தால் எத்தகைய இன்பத்தை அடையலாம்! அவனைக் காணும்படியான அநுபவம் கிடைத்தால் அது மிகப் பெரிய பேறு ஆகும். அந்தப் பேறு யாவருக்கும் கிடைப்பதன்று.

அவனுடைய திவ்ய தரிசனம் கிடைத்தால் உணர்ச்சி வயப்பட்டு அன்பர்கள் எப்படி எப்படியோ குதூகலிப்பார்கள். பல வகையில் தம் பக்தி உணர்ச்சியைக் காட்டுவார்கள்.

காரைக்கால் அம்மையார், "இறைவனுடைய திவ்ய தரிசனம் கிடைத்தால் இப்படியெல்லாம் செய்வேன்” என்று சொல்கிறார்.

பெரியானைக் காணப் பெறின்.

தாம் செய்வன இவை என்று அவர் சொல்வதைக் கேட்கலாம்.

பெருமானுடைய அழகுக் காட்சி காணக் காண இனிக்கும். ஒருகால் பார்த்தால் போதாது; கண்ணை அகல விரித்துப் பருகுவது போன்ற ஆர்வத்தோடு பார்க்கலாம். கண்ணாரக் கண்டு மகிழலாம். அப்படிக் காண்பேன் என்கிறார் அம்மையார்.

கண்ஆரக் கண்டும்.