பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/521

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

511

பலகால் பார்த்துப் பார்த்துத் தம் கண்களில் இறைவன் திருவுருவே நிரம்பி நிற்கும் அநுபவம் அவருக்குக் கிடைக்கிறது. பார்த்துக் கொண்டே தம்மை மறந்து நின்றவர், சிறிது உணர்வு வரப்பெற்று, ‘எம்பெருமான் அல்லவோ நம் முன் நிற்கிறான்? இவனைப் பார்த்துக் கொண்டேயிருந்தால், போதுமா? இவன் நமக்கு நேர்பட்டானே என்ற மகிழ்ச்சியில், செய்ய வேண்டியதை மறக்கலாமோ? இவனை வணங்க வேண்டாமோ? என்ற எண்ணம் தோன்றும். உடனே கைகளைக் கூப்புவாராம். கைகளை நன்கு இணைத்துக் கும்பிடுவாராம்.

கையாரக் கூப்பியும்.

கைகள் அவனைக் கும்பிடுவதற்காகவே இருக்கின்றன என்ற உண்மையை உணர்ந்து கைகளின் செயல் நிரம்பும் படியாகக் கூப்புவார்.

நம்முடைய இந்திரியங்கள் இருவகைப்படும். ஞானேந்திரியங்கள், கன்மேந்திரியங்கள் என்பவை அவை; கண், காது, மூக்கு, சுவையுணரும் நாக்கு, தோல் என்பவை ஞானேந்திரியங்கள். இவற்றில் கண் தலைமையானது.

“கண்ணிற் சிறந்த உறுப்பில்லை”

என்பார்கள்.

அத்தகைய சிறந்த இந்திரியத்தால் சிறந்த செயலைச் செய்வதுதான் அறிவு படைத்தவர்களுக்கு அழகு. எதைக் காண வேண்டும், எதைக் கண்டால் மற்றவற்றைக் காணுவதால் பெறமுடியாத பெரிய இன்பத்தைப் பெறலாம் என்பதை அறிந்து செய்ய அறிவுடைய மனிதரால்தான் முடியும் ஆகவே இறைவன் திருவடிவைத் தரிசிப்பதே கண் படைத்த பயன் என்று அன்பர்கள் எண்ணுவார்கள். அவனைக் கண்ணாரக் கண்டு களிப்பார்கள்.