பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/522

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

512

கை, கால், பேசும் வாக்கு, எருவாய், கருவாய் என்பன கன்மேந்திரியங்கள். மனிதனுக்குத்தான் எடுக்கவும் கொடுக்கவும் ஆற்றல் பெற்ற கைகள் இருக்கின்றன. குரங்குகளுக்குக் கை இருந்தாலும் அது காலாகவும் பயன்படும். யானைக்குத் துதிக்கை இருந்தாலும் நம்முடைய கையைப் போல இல்லை. ஆகவே நல்ல முறையில் அமைப்பான கைகளைப் படைத்த மனிதன் அந்தக் கைகளால் மிகச் சிறந்த செயலைச் செய்ய வேண்டும்.

“கைகாள் கூப்பித் தொழீர்”

என்று அப்பர் சுவாமிகள் திருவங்க மாலையில் கைக்குரிய பணி இன்னதென்பதைச் சொல்கிறார். இறைவனைக் கூப்பித் தொழுவதே கைகளுக்குரிய சிறப்பு. அம்மையாரும்,

கையாரக் கூப்பியும்

என்கிறார்.

கரணங்கள் மூன்று. அவை உடல், உரை, மனம் என்பவை. உடம்பிலுள்ள இந்திரியங்களில் சிறந்தவற்றை இறைவனுடைய வழிபாட்டில் ஈடுபடுத்திய அம்மையார் இனி மற்றக் கரணங்களையும் ஈடுபடுத்துவதைப் பற்றிச் சொல்ல வருகிறார்.

மனம் முழுவதும் நிரம்ப இறைவனுடைய வடிவத்தையும் புகழையும் எண்ணி எண்ணி இன்புறுவது அன்பர்களின் இயல்பு. சுவையுள்ள தின்பண்டங்களைக் கண்டு மகிழலாம். அதோடு நின்றுவிட்டால் பயன் என்ன? அவற்றை உண்டு மகிழ வேண்டும். அப்படியே இறைவன் திருவுருவத்தைக் கண்டும் கைகூப்பியும் மகிழ்வதோடு நில்லாமல் அதை உட்கொள்ள வேண்டும். உள்ளமெல்லாம் நிறைய நம் எண்ணங்களெல்லாம் அந்த உருவம் பற்றியவையாகவே அமையத் தியானம் செய்ய வேண்டும். அம்மையார் அப்படி எண்ணி இன்புறுகிறவர்.