பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/524

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

514

திரும்ப அவற்றையே சொல்லி இன்புறுவாராம். உணர்ச்சி மிகும்போது பல பல வார்த்தைகளை நினைந்து சொல்லும் இயல்பு இராது. ஒன்றையே திருப்பித் திருப்பிச் செல்வோம். அப்படி, 'விண்ணோன், விண்ணோன். எரியாடி, எரியாடி என்று பலமுறை சொல்லிச் சொல்லி உணர்ச்சியிலே மிதப்பார் அம்மையார்.

விண்ணோன் எரிஆடி என்று என்றும் இன்புறுவன்.

இறைவன் திருக்காட்சியைக் கண்டபோது கண்ணுக்கு இன்பம்; கருத்துக்கும் இன்பம். கை கூப்பும்போது கரத்துக்கும் இன்பம்; மனத்துத்துக்கும் இன்பம், மனத்துக்குள் அவன் உருவத்தை எண்ணும்போது அங்கே இன்பமே நிரம்பும் ‘விண்ணோன், எரியாடி’ என்று சொல்லும் நாவுக்கும் உள்ளத்துக்கும் இன்பம் உண்டாகும்.

"பேசப் பெரிதும் இனியாய் நீயே" என்று அப்பர் பாடுவார்.

'பெரியவனாகிய இறைவனைக் காணும் பேறு பெற்றால் இவ்வாறெல்லாம் செய்து இன்புறுவேன்' என்று சொல்கிறார் அம்மையார், இந்தப் பாட்டில்.

கண்ஆரக் கண்டும் என் கைஆரக் கூப்பியும்
எண்ஆர எண்ணத்தால் எண்ணியும்—விண்ணோன்
எரியாடி என்று என்றும் இன்புறுவன் கொல்லோ?
பெரியானைக் காணப் பெறின்?.

“எல்லாரினும் பெரியவனாகிய சிவபெருமானைத் தரிசிக்கும் பேறு பெற்றால், அவனை என் கண் நிரம்பும்படியாகப் பார்த்தும், என் கைகள் நிரம்பக் கும்பிட்டும், மனம் நிரம்பும்படியாக அவனைப் பற்றிய எண்ணங்களை எண்ணியும், 'மகா தேவனே! எரியாடியே' என்று பலகால் சொல்லியும் இன்பம் அடைவேன்.”