பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/525

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

515

கண்கள் வேறு ஒன்றைப் பாராமல் அவனையே பார்த்தல், கண்ணாரக் காணல். கைகள் முழுவதும் பொருந்திக் கும்பிடுதல் கை ஆரக் கூப்பல். எண்-மனம்; ஆகுபெயர். மனம் நிரம்பும்படி தியானித்தலைச் சொன்னார். எண்ணத்தால் - எண்ணங்களை; உருபுமயக்கம். என்று என்றும் – என்றென்று பலகால் சொல்லியும்.

கண்டும் கூப்பியும், எண்ணியும், என்றும் என்பவற்றில் உள்ள உம்மைகள் எண்ணும்மைகள்.

கண் காணுவதும் கை கூப்புவதும் மெய் என்னும் கரணத்தின் செயல்கள்; எண்ணுதல் மனம் என்னும் காணத்தின் செயல்; என்றென்று கூறுதல் வாக்கு என்னும் கரணத்தின் செயல்; மூன்று கரணங்களின் செயல்களையும் கூறினார். கரணங்கள் யாவும் இறைவனிடம் ஈடுபட்டு நிற்பதைச் சொன்னார். கண்ணும் கையும் வாயும் புறக்கரணங்கள். மனம் அகக்கரணம். உள்ளும் புறம்பும் இறைவன் மயமாக நின்று இன்புற்றார் அம்மையார்.

கொல், ஓ: இரண்டும் அசைகள். ஐயமாகக் கொண்டு அவனைக் கண்ட இன்பத்தில் செயலிழந்து நிற்பேனோ, அன்றி இவற்றைச் செய்வேனோ? என்றதாகவும் கொள்ளலாம். அந்தப் பொருள் கொள்ளும்போது, ஓ: அசை.

செயின் எனும் வாய்பாடமைந்த பெறின் என்பது பெறுவதன் அருமையைக் காட்டியது.

பெறின், கண்டும், கூப்பியும், எண்ணியும் இன்புறுவன் கொல்லோ என்று முடிக்க.]

இறைவனுடைய தரிசனத்தால் கரணங்கள் யாவும் தெய்வீக இன்பத்தை அடையும் என்பது கருத்து.

அற்புதத் திருவந்தாதியில் வரும் 85-ஆம் பாடல் இது.