பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/526

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87. வேறு நிலையே வேண்டாம்


காரைக்காலம்மையாரை மணந்த கணவன் அவருடைய தெய்விகத் தன்மையை அறிந்து, அவரை மனைவியாகக் கொண்டு வாழ்வது தவறு என்று உணர்ந்து மதுரைக்குச் சென்று வேறொரு பெண்மணியை மணந்துகொண்டு வாழ்ந்தான். அந்த மனைவிக்குப் பிறந்த பெண் குழந்தைக்குக் காரைக்கால் அம்மையாரின் இயற்பெயராகிய புனிதவதி என்பதையே வைத்தான்.

கணவன் பிரிந்த பிறகு சுற்றத்தாருடன் அவனைத் தேடிக் சென்று அடைந்தபோது அவன் அம்மையாரை வணங்கினான்.

அதைக் கண்ட அம்மையார் அச்சத்தோடு ஒதுங்கி நின்றார். சுற்றத்தார் அவனிடம், "உன் மனைவியை வணங்குவது ஏன்?" என்று கேட்டார்கள். அதற்கு அவன், “இவர் மானிடப் பிறவி அல்லர், தெய்வத் தன்மை உடையவர். இதை அறிந்து, இவரை மனைவியாகக் கொண்டு வாழ்தல் தகாது என்று இங்கே வந்து வேறு திருமணம் செய்து கொண்டேன். இங்கே பிறந்த பெண் குழந்தைக்கு இவருடைய பெயரை வைத்தேன். நீங்களும் இவரைப் பணியுங்கள்” என்றான்.

கணவராக மணந்த அவன் அவ்வாறு சொல்லவே, அம்மையார், "இவனுக்காகத் தாங்கிய இந்த அழகுடைய உடம்பைப் போக்கித் தசையற்ற பேய் வடிவத்தை அருள் வேண்டும்” என்று இறைவனை வேண்டினார். இறைவன் அவ்வாறே அருள் புரிய அவர் பேய் வடிவம் கொண்டு நின்றார். அந்த நிலையில் அவர் பாடியது அற்புதத்திருவந்தாதி.