பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/527

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

517

சிவபெருமானைச் சுற்றிப் பேய்க்கணங்கள் இருக்கும். காரைக்காலம்மையாரும் அந்தக் கணங்களில் ஒன்றாகி விட்டார்.

தாம் பேயானதை அவரே சொல்கிறார், ‘சிவபெருமானுடைய நல்ல பேய்க் கணங்களில் ஒன்றான நாம்’ என்று பெருமையோடு சொல்லிக் கொள்கிறார்.

பேயாய
நற்கணத்தில் ஒன்றாய நாம்.

இறைவன் இரண்டு கண்களுக்குமேல் நெற்றியில் ஒரு கண்ணை வைத்தவன். இறைவனோடு இரண்டறக் கலக்கும் நிலை அது. அதுதானே யாவரும் பெறவேண்டியது?

அந்தக் கண்ணை எப்போதும் திறந்திருக்கமாட்டான். யாருக்கேனும் தன் ஆற்றலைச் சிறிது உணர்த்த வேண்டுமானால் அப்போது அதைத் திறந்து காட்டுவான். நக்கீரரோடு வாதிட்டபோது அதைச் சிறிதே திறந்து காட்டினன். மன்மதன் மலரம்புகளை விட்டபோது சிறிது அந்தக் கண்ணை விழித்துப் பார்த்தான். ஆகவே, தன் நெற்றியின்மேல் அந்தக் கண் இருப்பதைச் சிறிதளவே உணர்த்தி வைத்திருக்கிறான்.

சிறிது உணர்த்தி
மற்றொருகண் நெற்றிமேல் வைத்தான்.

அவனுடைய பேய்க்கணத்தில் ஒன்றாக இருக்கிறார் அம்மையார்.

“இந்த நிலையில் எவ்வளவு காலம் இருக்கப் போகிறீர்கள்?” என்று நாம் கேட்கிறோம்.

“ஏன்? இந்த நிலையே பெரிய நிலை அல்லவா? சிவபெருமானுடைய நல்ல கணத்தில் ஒரு பேயாக இருக்கும் பேறு பெறற்கு அரியதல்லவா?”