பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/529

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

519

என்றபடி வீட்டின்பத்தையும் வேண்டாத மிடுக்கோடு அவர் இருக்கிறார். ஆதலால், “வேறு எந்த உயர்ந்த நிலை எமக்குக் கிடைப்பதாக இருப்பினும் அது வேண்டியதில்லை. இந்த நிலையே போதும்” என்று சொல்கிறார்.

பெறினும் பிறிதியாதும்
வேண்டேம், நமக்குஈது
உறினும் உறாதுஒழியு மேனும்;-
சிறிது உணர்த்தி
மற்றொருகண் நெற்றிமேல்
வைத்தான்றன் பேயாய
நற்கணத்தில் ஒன்றாய நாம்.

அந்வயம்: மற்றொருகண் சிறிதுணர்த்தி நெற்றிமேல் வைத்தான்றன் பேய் ஆய நற்கணத்தில் ஒன்று ஆய நாம், உறினும் உறாது ஒழியுமேனும், பிறிது யாதும் பெறினும் வேண்டேம்.

“இயல்பான இரண்டு கண்களோடு மற்றும் ஒரு கண்ணைச் சில சமயங்களில் சிறிதளவு உணரச் செய்து தன் நெற்றியின், மேல் வைத்துள்ள சிவபிரானுடைய பேயாகிய நல்ல கணத்தில் ஒரு பேயாகிய நாம், இந்த நிலை எப்போதும் தங்கினாலும் தங்காமல் போய் விட்டாலும், இதனினும் சிறந்ததென்று பிறர் சொல்லும் பிறநிலை எதனையும் வேண்டோம்.”

[பெறினும் என்ற உம்மை உயர்வு சிறப்பும்மை; பெறுவது அரிதென்றபடி. பிறிது யாதும் பெறினும் வேண்டேம். எது உறினும் உறாது ஒழியுமேனும் யாதும் வேண்டேம், பிறிது யாதும் என்பவை புணரும்போது குற்றியலுகரம் ஆயிற்று. இது என்றது இறைவன் அடிக்கீழ் இருக்கும் நிலையை சிறிது உணர்த்தி – சிறிதளவு ஞானத்தைப் பெறச் செய்து என்றும் பொருள் கொள்ளலாம். இயல்பான கண்கள் இருப்பதனால் நெற்றிக்கண்ணை மற்றொரு கண் என்றார்.