பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6.என் நெஞ்சத்தான்


ஆண்டவன் எங்கே இருக்கிறான்? இந்தக் கேள்வியைக் கேட்பதைவிட, அவன் எங்கே இல்லை?” என்ற கேள்வி பயனுடையதாக இருக்கும். ஆண்டவன் இல்லாத இடமே இல்லை.

ஒரு நாள் ஒளவைப்பாட்டி நெடுந்தூரம் நடந்து வந்து அலுப்போடு ஒரு கோவிலுக்குள் நுழைந்தாள். சந்நிதியில் உட்கார்ந்து இளைப்பாற எண்ணினாள். சுவாமிக்கு நேரே காலை நீட்டிக்கொண்டு உட்கார்ந்துவிட்டாள். அதை அங்கே இருந்த பையன் ஒருவன் பார்த்தான்; “பாட்டி, பாட்டி, சுவாமி இருக்கிறார்!” என்றான். உடனே பாட்டி சிரித்துக்கொண்டு, “அப்படியா? நான் கவனிக்கவில்லை. நான் கிழவி; மிகவும் அலுப்பாக இருக்கிறது. நீயே என் காலைச் சுவாமி இல்லாத இடமாகப் பார்த்துத் திருப்பி விட்டுவிடப்பா. உனக்குப் புண்ணியமாகப் போகும்” என்றாள். "சுவாமி இல்லாத இடமா?" பையன் யோசனையில் ஆழ்ந்து விட்டான்.

திருமாலின் அடியவரான கனகதாசர் இளம் பருவத்தில் ஒரு ஞானகுருவை அடைந்து பணிந்து உபதேசம் செய்ய வேண்டுமென்று வேண்டிக் கொண்டார். அவருடைய பக்குவத்தைத் தெரிந்து கொள்ள எண்ணினார் குருநாதர். கனகதாசர் கையில் ஒரு பழத்தைக் கொடுத்து, “இதை யாரும் இல்லாத இடத்தில் சாப்பிட்டு விட்டு வா” என்று பணித்தார்.