பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/532

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

522

இறைவனுடைய பொன்னிறம் பெற்ற திருவடிகளைத் தரிசிக்கும்போது அதற்கு அலங்காரம் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகிறது அவருக்கு. ஈசனிடம் நெருங்கி உறவாடும் அன்பையுடைய அவர் அப்பெருமானை, நம் ஈசன் என்று சொல்கிறார். அவருக்கு உள்ளது ஒரே உறவுதான். இறைவனுடைய உறவுதான் அது. ஆகவே,

நாமாலை சூடியும் நம் ஈசன்
பொன்அடிக்கே

என்கிறார்.

குழந்தையின் அழகிய அடிகளைக் கண்டவுடன் தாய்க்கு அவற்றிற்குத் தண்டையும் வெண்டயமும் பூட்டி அலங்காரம் செய்யும் ஆர்வம் உண்டாவது போல அம்மையாருக்கும் உண்டாகிறது. அதனால் அந்த அடியைப் புனைந்து பார்க்க விரும்புகிறார்.

நாமாலை சூடுவது மாத்திரம் அன்று, அந்தப் பொன்னடிக்கு மற்றவர்களைப் போலப் பூமாலையைக் கொண்டு புனையவும் ஆர்வம் பிறக்கிறது. எனவே,

நம்ஈசன் பொனஅடிக்கே
பூமாலை கொண்டு புனைந்து அன்பாய்

என்கிறார்.

அவர் வேறு யாரையும் பாமாலை கொண்டு பாடுபவர் அல்லர்; பூமாலை சூட்டுபவரும் அல்லர். அது செய்தாலும் இறைவனுடைய திருவடிகளுக்கே அர்ப்பணம் செய்கிறவர். அவனுடைய திருவடிகளேயன்றி வேறு ஒருவரைப் பாடுவதையோ, மலர்மாலை சூடுவதையோ அறியாதவர் அவர். அவற்றிற்கே பாமாலையையும் பூமாலையையும் சூட்டுகிறவர். ஆகவே பிரிநிலை ஏகாரம் போட்டு,

நம் ஈசன் பொன் அடிக்கே

என்று சொல்கிறார்.