பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/534

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

524

கிறது. பணம், கல்வி, உடல்வன்மை ஆகியவற்றை உடையவர்களைத் துணையாகப் பெற்றவர்கள் தமக்கு அவை இல்லாவிட்டாலும் தம் நண்பர்களின் பலத்தினால் தைரியமாக இருப்பார்கள். எல்லாரையும்விட வல்லமையை உடையவன் இறைவன். அவன் எல்லாம் வல்ல பெருமான்.

அருள் என்னும் அருஞ் செல்வத்தைப் படைத்த பெருஞ்செல்வன் அவன். எல்லாம் அறிந்த சர்வக்ஞன். அவனுடைய நல்ல துணையைப் பெற்றவர்களுக்கு எதனாலும் குறை உண்டாகாது. குறையிலா நிறைவாகிய ஈசனைப் பற்றியவர்களும் குறைவிலா நிறைவோடு இருப்பார்கள். ‘நமக்கு என்ன குறை?’ என்ற செம்மாப்பு அவர்களுக்கு உண்டாகும்.

“நாம் ஆர்க்கும் குடியல்லோம்,
நமனை அஞ்சோம்,
நரகத்தில் இடர்ப்ப டோம்.
நடலை இல்லோம்;
ஏமாப்போம், பிணிஅறியோம்
இனைவோம் அல்லோம்;
இன்பமே எந்நாளும்;
துன்பம் இல்லை”

என்ற பெருமிதம் அவர்களிடம் எழும். அந்த நிலையில் அம்மையார், "இனி நாம் எதற்கு அஞ்ச வேண்டும்?” என்று இறுமாந்து பேசுகிறார். காலனுக்கும் அஞ்சாத மனத் திண்மை உண்மையன்பர்களுக்கு இருக்கும்.

நம்மையெல்லாம் பாவங்கள் பற்றிக் கொண்டு துன்புறுத்துகின்றன; அடுகின்றன. மெய்யன்பர்களிடம் அவை அணுகுவதில்லை. அவர்களைக் கண்டாலே தூர விலகிப் போகும். ஆகையால் அந்த வினைகளைப் பற்றிய அச்சம் அவர்களுக்கு இராது, ‘பிறரை அடுகின்ற வினை நம்மிடம் எப்படி வரும்? அவை நம்மை என்ன செய்யும்?’ எள்று மிடுக்குடன் சொல்வார்கள். மற்றவர்களை, இருள் செறிந்து வந்து மூடிக்