பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/537

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89. கண்டத்து ஒளி


இறைவனைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறார் காரைக்கால் அம்மையார். அவருடைய நீலகண்டத்தைத் தரிசித்து அது பற்றிய வினாவை விடுக்கிறார். இறைவனுடைய நீலகண்டத்தில் ஈடுபடுகிறவர் அவர் என்பதைப் பல முறை பார்த்திருக்கிறோம்.

இப்போது அதைப்பற்றியே கேட்கிறார். “இறைவனே, இதை எமக்கு அருளிச் செய்ய வேண்டும்” என்று விண்ணப்பித்துக் கொள்கிறார்.

அருள் எமக்கு.

இறைவனை விளித்து இந்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கிறார். அவன் நல்லன எல்லாவற்றையும் உடையவன்.

“நன்றுடையானைத் தீயதில்லானை” என்பது சம்பந்தர் திருவாக்கு. ஆகவே அவனை,

நன்று உடையாய்!

என்று விளிக்கிறார்.

இறைவன் தன்னுடைய செந்நிறம் பெற்ற சடாபாரத்தில் சந்திரனை அணிந்திருக்கிறான். அது பிறையாதலின் மாசு மறுவின்றி ஒளிர்கிறது. இறைவனுடைய திருச்சடையாகிய பாதுகாப்பான இடத்தில் இருப்பதனால் அது நன்றாக விளங்கித் தோன்றுகிறது. அது ஒளி வீசி இலங்கும்படி தன் செஞ்சடை மேல் அதைப் புனைந்திருக்கிறான். அந்தச் சந்திரசேகரனிடம் தம் விண்ணப்பத்தைச் சொல்கிறார்.