பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/538

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

528

செஞ்சடைமேல், நக்கு இலங்க வெண்மதியம்
ஒன்று உடையாய்;

உன்னுடைய திருக்கழுத்தில் நஞ்சை வைத்திருக்கிறாய். அது நீல வண்ணமுள்ள ஒளியுடன் அங்கே இலங்குகிறது. அதற்கு நான் எதை உவமை சொல்லட்டும்?’ என்று சொல்கிறார்.

கண்டத்து ஒளி.

ஒளிபடைத்த திருமேனியை உடைய சிவபெருமானிடம் இருப்பதனால் அந்த நஞ்சும் ஒளியுடையதாக இருக்கிறது. அதன் ஒளியைப் பார்த்து, அதற்கு எதை உவமை சொல்லலாம் என்று யோசிக்கிறார் அம்மையார்.

“இரா நீர் இருண்டனைய கண்டத்தீர்” (22)
“இருள் போந்து இடம் கொண்டிருக்கின்றது ஒக்கும்” (35)
“மற்றவற்கு வீங்கிருளே போலும் மிடறு” (65)

என்று அதற்கு இருளை உவமையாக்கி முன்பு சொன்னார்.

இப்போதும் அதையே முதலில் நினைக்கிறார்; ‘இந்தக் கண்டத்தின் நிறத்தை இருளின் உருவென்று சொல்லட்டுமா?’ என்று தொடங்குகிறார்.

இருளின் உருஎன்கோ?

இருளைச் சொல்வது அவ்வளவு சிறப்பன்று. இருள் எல்லாவற்றையும் தனக்குள் மறைத்துக் கொள்வது; அறியாமைக்கு உவமையாவது. அதைச் சொல்லலாமா?’ என்ற எண்ணம் தோன்றுகிறது. ‘கரியதாகவும் இருக்க வேண்டும்; பார்க்கக் குளிர்ச்சியாகவும் இருக்க வேண்டும்; நலம் பயப்பதாகவும் இருக்க வேண்டும். அப்படி உள்ள பொருள் எது?’ என்று யோசிக்கிறார். அவருடைய உள்ளத்தில் மேகம் வந்து நிற்கிறது. அதையே சொல்லலாமா என்று நினைக்கிறார்.