பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/539

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

529

மாமேகம் என்கோ?

‘இருளுக்கும் மேகத்துக்கும் ஒளி ஏது? இறைவனுடைய கண்டம் ஒளியுடன் விளங்குகிறதே! நீலமாகவும் ஒளியுடையதாகவும் ஒரு பொருள் இருந்தால் அதைத்தான் சொல்ல வேண்டும்’ என்ற எண்ணம் பிறகு உண்டாகிறது. ‘இது என்ன?’ என்று மயங்கி யோசிக்க வேண்டிய அவசியம் இல்லாமல், பளிச்சென்று தெரியும் நீலமணியைச் சொல்வதுதான் பொருத்தம் என்ற எண்ணம் எழுகிறது. உடனே,

மருள்இல் மணிநீலம் என்கோ?

என்கிறார்.

‘இப்படி நாம் உவமையைத் தேடித் தடுமாறுவானேன்? எம்பெருமானிடமே இந்தச் சந்தேகத்தைக் கேட்டு விடலாமே!’ என்ற எண்ணம் அடுத்தபடி தோன்றுகிறது. ஆகவே, ‘எம்பெருமானே, நீயே சொல்லியருள்’ என்று சொல்கிறார்.

அருள் எமக்கு.

இறைவனுடைய திருநீலகண்டத்தின் ஒளியிலே சொக்கிப் போய், அதைப் பார்த்துப் பார்த்து இன்புறுகிறார் அம்மையார். ஒரு செப்புக்குள் மற்றொரு செப்பைப் போட முயலும் குழந்தை இரண்டின் அளவையும் தெரிந்து கொள்ளாமையால், ஒவ்வொன்றாக எடுத்து வைத்துப் பார்ப்பது போல அம்மையார் உவமைச் செப்பில் கண்டத் தொளியை அடைக்கப் பார்க்கிறார்.

இருளின் உருஎன்கோ?
மாமேகம் என்கோ?
மருள்இல் மணிநீலம்
என்கோ? - அருள்எமக்கு;
நன்றுஉடையாய், செஞ்சடைமேல்
நக்குஇலங்கு வெண்மதியம்
ஒன்றுஉடையாய் கண்டத்து ஒளி

:நா—34