பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. காரணமும் காரியமும்


இறைவனிடத்தில் ஈடுபடுவது என்பது எளிய காரியம் அன்று. அநாதி காலமாக நம்மைப் பிணித்துள்ள அவித்தை மிகவும் வலிவுடையது. இந்த உலகத்தில் உள்ள சூழ்நிலையோ மேலும் மேலும் பற்றுக்குள் ஆழ்த்துவதாக இருக்கிறது. இதனிடையில் தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாவது அருமையிலும் அருமை. மாணிக்கவாசகர் எத்தனையோ இடையூறுகளுக்குப் பிறகுதான் ஈசுவரபக்தி உண்டாகும் என்று சொல்லுகிறார். அவர் ஒவ்வொன்றாக அடுக்கிச் சொல்லுகிற தடைகள் பலப்பல.

இறைவனுடைய திருவருள் இருந்தால்தான் அவனை வழிபடும் எண்ணம் உண்டாகும்.

"அவன்அரு ளாலே அவன்தாள் வணங்கி!”

என்பது திருவாசகம்.

"தவமும் தவம்உடையார்க் காகும்!”

என்பார் திருவள்ளுவர்.

ஒரு பிறவியிலே செய்யும் முயற்சியினால் நல்ல எண்ணங்கள் தோன்றுவதில்லை. பல காலம் செய்த பயிற்சிகளாலே மனம் தெளிவடையும்.

"நூதன விவேகி உள்ளம் நுழையாது
நுழையு மாகில்
பூதசன் மங்கள் கோடி புனிதனாம்
புருடனமே”

என்று கைவல்ய நவநீதம் கூறும்.