பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/540

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

530

‘நல்லவற்றையெல்லாம் உடையவனே, செந்நிறம் படைத்த சடையின்மேல் ஒளி விட்டு விளங்கும்படி வெண்ணிறம் பெற்ற ஒன்றை உடையவனே, உன்னுடைய திருக்கழுத்தில் நஞ்சினால் உண்டான ஒளியை இருளின் உருவம் என்று சொல்வேனோ? கரிய மேகம் என்று சொல்வேனோ? மயக்கமின்றித் தெளிவாக வண்ணம் தெரியும் நீலமணி என்று சொல்லட்டுமா? எது சரி என்பதை நீயே எமக்குச் சொல்லியருள வேண்டும்.

[உரு–நிறம். என்கோ-என்று சொல்வேனோ? மா-கருமை, மருள் இல் மணி நீலம்- என்ன நிறம் என்று தெரியாமல் மயங்குதல் இன்றித் தெளிவாகத் தெரியும் நீலமணி. மணி நீலம்-நீலமணி. எமக்கு அருள்வாயாக. நன்று - நல்ல பண்புகள்; தொகுதி ஒருமை. எமக்கு அருள் நின்று உடையாய் என்று சேர்த்து "அடியேங்கள் திறத்தில் திருவருளை நன்றாக உடையவனே" என்றும் பொருள் கொள்ளலாம். நக்கு—ஒளிவிட்டு. ‘நச்சிலங்கு வெண்மதியாய்’ ஒரு பாடம். பிறையாகலின் மறுவின்றி முழுவதும் வெண்மையான மதியம் என்றார். மதியம் என்பது முழுமதியைக் குறிக்கப் பெரும்பாலும் வருமேனும் இங்கே பிறையைக் குறித்தது.

செஞ்சடை மேல் இருப்பதனால் வெண்மதியம் நன்றாக விளங்குகிறது. கண்டத்து ஒளி - திருக்கழுத்திலுள்ள ஒளியை எழுவாயாக வைத்து ‘ஒளி இருளின் உரு என்கோ?’ என்று பொருள் கொள்வதும் பொருந்தும்.

‘ஒளி என்கோ, எண்கோ, என்கோ? எமக்கு அருள்’ என்று கூட்டி முடிக்க.

இறைவனுடைய திருநீலகண்டத்தைக் கண்டு தம் சிந்தனையை அதிற் பதித்து நின்று பாடுகிறார் அம்மையார்.]

இது அற்புதத் திருவந்தாதியில் 88ஆவது பாடலாக அமைந்தது.