பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/541

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90. வாயும் கண்டமும்


காரைக்காலம்மையார் இறைவனை விளித்துத் துதிப்பார். அவனுக்கு அறிவுரை சொல்வது போல ஒன்றைச் சொல்லார். அவனிடம் சில வினாக்களை விடுப்பார். இவையெல்லாம் அவருடை பக்தி உணர்ச்சியால் எழுபவை.

இப்போது இறைவனிடம் ஒரு கேள்வி கேட்கிறார். இறைவனுடைய நஞ்சுண்டு இருண்ட கண்டத்தில் தம் பார்வையைப் பதித்துப் பல வேறு வகையில் அவர் பேசுவதை நாம் பார்த்து வருகிறோம்.

முதலில் இறைவனை விளிக்கிறார்.

அடியவர்கள் இறைவன்மேல் மலர்களைத் தூவி அர்ச்சனை புரிவார்கள். அவர்களுக்கு அவன் அருள் பாலிப்பான். ஆனால் ஒருவன் அவன்மேல் மலர்களை வீசினான். அவனைப் பெருமாள் எரித்துவிட்டான். பக்தர்கள் அன்பினால் மலர் தூவி வழிபடுவார்கள். அவனோ மென்மையான மலர்களையே தன் அம்புகளாகக் கொண்டு எய்வான். உலகத்து மக்களிடம் அந்த அம்புகளினால் காம உணர்ச்சி உண்டாகும்படி செய்வான். இறைவனிடமும் அந்த வேலையைச் செய்தான். அதன் பயன் என்ன? அவன் எரிந்து சாம்பலானான். காமாக்கினியால் யாவரையும் தகிக்கும் மன்மதனது ஆற்றல் எம்பெருமானிடம் பலிக்கவில்லை.

பளபளவென்று ஒளி வீசும் கரும்பு வில்லை உடையவன் மன்மதன். அவனைத் திருக்கண்ணோக்கத்தால் எரித்து விட்டான் எம்பெருமான்.

ஒளிவிலி வன்மகனை ஒண்பொடியா நோக்கி.