பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/542

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

532

அவன் விட்டவை மென்மலர்கள்தாம் என்றாலும் அவன் அவற்றையே தன்னுடைய படைக்கலமாகக் கொண்ட வன்மையை உடையவன். அவன் சாம்பரானான். இறைவன் திருக்கண்ணால் சாம்பராதலின் அது பளபளக்கிறது.

இவ்வாறு காமனை எரித்த திருவிழியை உடைய இறைவன் அன்பர்களுக்குக் தண்மையான அருளைப் புரிபவன். அவர்களுடைய சித்தம், காமம் முதலிய மாசுகள் இல்லாமல் தெளிவாக இருக்கும். தெளிவற்ற உள்ளங்களில் அவன் இருந்தாலும் அங்கே அவன் நிலைகொள்வதில்லை. சலனமுள்ள நீரில் நிழல் நன்கு தெரியாமல் இருப்பது போல, இறைவனுடைய வடிவம் அத்தகைய உள்ளங்களில் நிலைகொள்வதில்லை.

ஆனால் ஞானத்தால் தெளிவு பெற்ற உள்ளங்களில் அவன் நிலையாகத் தங்கியிருப்பது போலக் காட்சியளிப்பான்.

தெளிவுள்ள சிந்தனையிற் சேர்வாய்!

சிந்தனை என்பது சித்தத்தைக் குறித்தது. மனத்தில் நான்கு பகுதிகள் உண்டு. அவை மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பன. அவற்றை அந்தக்கரணம் என்றும் அகக் கரணம் என்றும் கூறுவர். மனம் ஒன்றை விட்டு மற்றொன்றில் தாவுவது.

“ஒன்றைவிட் டொன்று பற்றிப்
பாசக் கடற்குளே வீழாமல் மனதற்ற
பரிசுத்த நிலையை அருள்வாய்”

என்று வேண்டுவார் தாயுமானவர். அத்தகைய பரிசுத்த நிலையைப் பெற்றவர்கள் அடியார்கள்.

புத்தி என்பது, தக்கது இன்னது, தகாதது இன்னது என்று ஆராய்ந்து பார்ப்பது. சித்தம் என்பது ஒன்றைப் பற்றி நிற்பது. அகங்காரம் என்பது நான் என்ற உணர்வு.