பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

நாம் உண்ணும் செயலை மிக எளிதாகச் செய்கிறோம். பசித்தவனுக்கு முன் சோற்றை வைத்தால் அவன் உடனே விரைவாக அதை உண்ணப் புகுகிறாள். ஆகையால் சோற்றை உண்ணுவது நமக்கு இயற்கையாக அமைந்த காரியம் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் உண்மை அது அன்று.

பிறந்த குழந்தை பசியால் அழுகிறது. அதன் அருகில் பாலை வைத்தால் அது உண்ணாது. தாய் அதை ஊட்ட வேண்டும். குழந்தைக்குச் சோறு ஊட்டும் தாய் மலையைக் காட்டி, நிலாவைக் காட்டி, மல்லிகைப் பூவைக் காட்டி, ஊட்ட வேண்டியிருக்கிறது. அப்படி ஊட்டி ஊட்டிப் பழகிய பிறகே குழந்தை, தானாக உண்ணத் தலைப்படுகிறது.

மனிதனுக்கு இன்றியமையாத உணவை உண்பதற்கே இத்தனை பயிற்சி வேண்டுமானால், இறைவனை வழிபடுவதற்கும் அவனிடம் மனத்தைச் செலுத்துவதற்கும் எத்தனை பயிற்சி வேண்டியிருக்கும்!

எம்பெருமானுக்கு ஆட்பட்ட காரைக்காலம்மையார் தாம் பெற்ற பேற்றை நினைத்துப் பார்க்கிறார். இறைவன் கருணையினல், தாம் அவனுக்கு ஆளாகிய தன்மையை எண்ணி மனநிறைவோடு பேசுகிறார்.

“யான் முற்பிறவியில் நல்ல தவத்தைச் செய்திருக்கிறேன்” என்று பெருமிதத்தோடு சொல்கிறார். அது அகங்காரம் ஆகாதோ? என்றால், ஆகாது. இறைவன் திருவருள் வலிமையை உள்ளத்துட் கொண்டது அது. நெடுந்துாரம் நடந்து அடைய வேண்டிய இடத்தை அடைந்து, கடந்து வந்த தூரத்தைத் திரும்பிப் பார்த்த போது நம் மனத்தில் ஒருவகை நிறைவு உண்டாகிறதே, அத்தகைய நிறைவோடு பேசுகிறார்.

“யானே தவம்உடையேன்.”