பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

மனம் மற்றக் குணங்களை அழித்துவிட்டுப் பிறகு தன்னைத் தானே அழித்துக்கொள்ளும். அப்போது மனமற்ற பரிசுத்த. நிலை உண்டாகும்.”

கிராமத்தில் பிணத்தைச் சுடும் வெட்டியான், தன் கையில் ஒரு மூங்கிலைக் கொண்டு விறகுகளைத் தள்ளி எரிப்பான். எல்லாம் எரிந்த பின் அந்தச் கோலையும் அதிலே போட்டு எரித்துவிடுவான். எல்லாவற்றையும் எரிக்க உதவும் அந்தக் கோல் தானும் நெருப்பிலே எரிந்துபோவது போலச் சத்துவ குண மனம் ஏனைய இரண்டையும் அழித்து விட்டுப் பின்பு ஞானக்கினியிலே தன்னையும் அழித்துக் கொண்டு விடும். இந்த மனநாசத்தால்தான் இன்பநிலை உண்டாகும்.

எனவே, சத்துவகுணம் தலையெடுக்கும் நெஞ்சம் நல்ல நெஞ்சம். அது நல்லவற்றையே எண்ணும், உடனுக்குடன் வரும் ஊதியத்தை எண்ணாமல் நீண்ட காலம் நிற்கும் இன்ப வாழ்வை எண்ணும்.

இப்படி ஒரு நல்ல நெஞ்சம் வாய்க்க வேண்டுமானால் அதற்கு எவ்வளவோ தவம்-சாதனம்-செய்திருக்க வேண்டும்.

மனத்தில் எழுவது ஆசை; அந்த ஆசையே பிறப்புக்குக் காரணம். அந்த ஆசை மண், பெண், பொன் என்று மூவகைப்படும். இவற்றின் இனமாக வீடு, சுற்றம், மைந்தர், பதவி, புகழ் முதலிய ஆசைகள் உண்டு. இத்தகைய ஆசைகள் மேலும் மேலும் துன்பத்தை உண்டாக்கிப் பிறவிக்குக் காரணமாகும்.

ஆனால் வேறு ஒர் ஆசை பிறவிக்குக் காரணம் ஆகாது. 'இறைவன் அருளைப் பெற வேணடும் என்ற ஆசை அத்தகையது. அந்த ஆசைதான் பக்தி, முக்தி பெற வேண்டும் என்ற ஆசை அல்லது விருப்பம் நல்லது. அதை ‘முமுட்சுத்துவம் என்பார்கள். சாதன சதுஷடயங்களுள் ஒன்று அது. ஞானத்தைப் பெறுவதற்குரிய சாதனங்கள் நான்கினுள் முத்தியை விரும்பும் இச்சையும் ஒன்று.