பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/579

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99. சிவந்தது எப்படி?


இறைவனுடைய திருக்கரத்திலுள்ள செந்தீயைப் பற்றிச் சொன்ன காரைக்கால் அம்மையாருக்கு அதன் நினைவு பின்னும் எழுகிறது. அதைப் பற்றி மீண்டும் சிந்திக்கிறார். இறைவன் திருக்கரத்தில் உள்ள அழல் கொழுந்து விட்டு எரிந்து ஆடுகிறது. அதை ஏந்திய சிவபிரானுடைய உள்ளங்கை சிவப்பாக இருக்கிறது. அவனுடைய திருமேனியே செம்பவள வண்ணமுடையதுதானே?

'இறைவனது உள்ளங்கை சிவந்திருக்கிறதே! ஏன்? ஒருகால் தழலை ஏந்துவதனால் அந்தத் திருக்கரம் சிவந்து விட்டதோ? இவ்வாறு அவருடைய உள்ளத்தில் எண்ணம் எழுகிறது.

இறைவன் கரம் தீயினால் சிவக்குமா? அவனே தீ வண்ணன் தானே? அந்தப் பெரிய தீயை இந்தச் சிறிய தீ என்ன செய்யும்? அவன் தன் கையில் அனல் ஏந்துவது மட்டுமா? அவன் தீயிலேயே நின்று நடனம் புரிகிறவன் ஆயிற்றே!

அவன் கையில் அனல் ஏந்தி மயானத்தில் தீயில். ஆடுகிறான். அவன் காலில் கழல் ஒலிக்கிறது. அங்கே உள்ள பேய்களெல்லாம் அந்த நடனத்தைக் கண்டு களிக்கின்றன. அவனோடு சேர்ந்து அவையும் கூத்தாடுகின்றன.

இந்தப் பேயாட்டத்தைப் பேய் வடிவம் கொண்ட காரைக்கால் அம்மையாரும் கண்டு களித்திருக்கிறார். ஆகவே, அந்த மயானக் கூத்தனை விளித்துச் சொல்கிறார்.

கழல்ஆடப்
பேயோடு கானில்