பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

பெயர்ப்பலகையையோ தண்ணீர் ஊற்றுவது போன்ற படத்தையோ அங்கே வைப்பார்கள். அதுபோல ஆண்டவன், 'தன்னை அடைந்தார்க்கு ஆணவத்தின் அல்லல் போகும் என்பதற்கு அடையாளம் இட்டதுபோல் கைம்மா உரியைப் போர்த்திருக்கிறான்.

யானையை ஐம்பொறிகளுக்கு உவமை சொல்வதும் உண்டு. ‘உரனென்னும் தோட்டியான் ஒரைந்தும் காப்பான்' என்ற குறளால் இதை உணரலாம். பொறி ஐந்தினாலும், துன்புறுபவர்களுக்கு இறைவன் அவை அடங்கும்படி அருள் செய்பவன் என்பதைக் காட்ட யானைத்தோல் போர்த்திருக்கிறான் என்றும் கொள்ளலாம். அவனுக்கு ஆளாகிவிட்டால் பொறி அடங்கும்; ஆணவம் அகலும்.

அவன் நெற்றியிலே கண்ணை உடையவன். கண்ணுதலான். அது ஞானக்கண். இறைவனை அடைந்தவர்கள் ஞானத்தைப் பெறுவார்கள்.

அவன் வெண்ணீறு அணிந்த திருமேனியை உடையவன். எல்லாம் அழிந்த பிறகு எஞ்சியிருக்கும் திருநீற்றை அவன் பூசிக்கொண்டிருக்கிறான். உலகத்துப் பொருள்களை யெல்லாம் எரித்தால் சாம்பல் ஆகிவிடும். அந்தச் சாம்பலைப் பின்னும் எரித்தால் அது சாம்பலாகவே நிற்கும். அப்படி, எல்லாவற்றையும் சங்காரம் செய்து தனிப் பொருளாகச் சர்வ சங்கார காலத்தில் எஞ்சியிருப்பவன் சிவபெருமான். அவனுக்கு அழிவு இல்லை. இதை அவன் அணிந்த திருநீறு காட்டுகிறது. அவன் நித்தியன். ஆதலின் அவனை அடைந்தவர்கள் என்றும் மாறாத நித்தியமான ஆனந்தத்தைப் பெறுவார்கள்.

சிவபெருமானுக்கு ஆளானவர்கள், அவன் கைம்மா உரி போர்த்தவனாதலின் அவனருளால் ஆணவம் நீக்கப் பெற்று, அவன் கண்ணுதலான் ஆதலின் ஞானம் கைவரப் பெற்று, அவன் வெண்ணீற்று அம்மானாதலின் என்றும் பொன்றாத நித்தியானந்தத்தைப் பெறுவார்கள்.