பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. அவன் அருளின் தன்மை


"வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை” என்பது திருக்குறள். பிறவி பெற்ற பயன் இனிப் பிறவாமல் இருக்கும் வழியைத் தேடிக் கொள்வது. பிறப்பு என்பது துன்பத்தையே தருவது, பிறவாமை இன்பத்தைத் தருவது.

“பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும்பே ரின்பம்”

என்பது மணிமேகலை. எனவே துன்பம் நீங்கி என்றும் பொன்றாத இன்பம் பெற வேண்டுமானால் பிறவியை ஒழிக்க வேண்டும். அதற்கு வழி எது?

இறைவன் திருவடியைப் பற்றிக்கொண்டு அவனுக்கு அடிமையாகிவிட்டால் பிறப்பு என்னும் துயரைப் போக்கிக் கொள்ளலாம்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

என்பது திருக்குறள். இறைவனடியை இடையறாது சிந்தித்து அவனுக்கு அடியாராகி நிற்கும் அன்பர்கள் பிறவிக்கடலை நீந்துவார்கள். பொறிகள் போனவழியே போய் மனத்துக்கு அடியாராகிறவர்கள் மேலும் மேலும் பிறவிக்கடலில் ஆழ்ந்து அல்லல் படுவார்கள். கடலில் ஆழ்கிறவனுக்குப் புணை கிடைத்தாற்போல இருப்பது இறைவன் திருவடி. அதனைப் பற்றிக்கொள்கிறவர்கள் பிறவிக்கடலில் ஆழாமல் உய்தி பெறலாம்.

நா —4