பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

ஓடத்தில் ஏறி அக்கரையில் கால் வைத்த அந்தக் கணத்தில் நாம் ஆற்றினைக் கடந்தவராகி விடுகிறோம். அதுவரைக்கும் ஆற்றில்தான் இருப்போம். இறைவனுக்கு ஆட்பட்டவுடனே நாம் இனிப் பிறவாத நிலையை அடைவோம்.

"மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப்
பாத மேமனம் பாவித்தேன்;
பெற்ற லும்பிறந் தேன்; இனிப் பிற
வாத தன்மைவந்(து) எய்தினேன்”

என்று சுந்தரர் உறுதியாகச் சொல்கிறார். இறைவன் பாதத்தை மனத்தினாற் பற்றி அவனுக்கு அடிமை ஆகிவிட்டால் பிறகு பிறவித்துன்பம் இல்லாமற் போய்விடும்; இப்பொழுது எடுத்துள்ள பிறவியே இறுதியான பிறவியாக இருக்கும்.

காரைக்கால் அம்மையார் இந்தக் கருத்தைச் சொல்ல வருகிறார்.

"நான் எம்பிரானுக்கு அடிமை ஆகிவிட்டேன்” என்று தொடங்குகிறார்.

“ஆயினேன் ஆள் அவனுக்கு”.

இப்படி உறுதியாகச் சொல்லும் நிலை எல்லோருக்கும் வராது. எல்லாப் பொருள்களிலும் பற்று விட்டபோதுதான் இறைவனை உறுதியாகப் பற்றும் திறம் வரும். இறைவனை உறுதியாகப் பற்றுதற்கு இடையூறாக இந்தப் பிரபஞ்சமே குறுக்கே நிற்கிறது. நம்முடையே மனமே தடுக்கிறது.

"நூறு நூறு மாயா சக்திகள்
வேறு வேறுதம் லீலை தொடங்கின"

என்று பாடுவார் மணிவாசகர். இறைவன் திருவடி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, அதனைத் குலைக்க வரும் பிரபஞ்ச வாசனையை உதறித் தள்ளிவிட்டு, இறைவனுக்கே ஆளாவது அரிதிலும் அரிய செயல்.