பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

விரும்புகிறவர்கள்; காம்யார்த்தமாகப் பக்தி பண்ணுகிறவர்கள் மற்றொரு வகையினர். பிறப்பை அறுத்து வீட்டின்பம் பெறவேண்டி இறைவன் திருவருளை நாடுகிறவர்கள். இறைவன் அருளால்தான் இந்த நலங்களெல்லாம் கிட்டும். அவன் அருள் இல்லாவிட்டால் ஆளும் பதவி கிட்டாது. அதுதான் எல்லாவற்றையும் ஆள்விப்பது; முக்தியைத் தருவதும் அதுதான்.

இப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள்; நல்ல அநுபவம் உண்டானால் நன்மை உண்டாகும், ஏதேனும் ஊதியம் கிடைத்தால், அது இறைவன் திருவருளால் உண்டானது என்று அன்பர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் காரைக்காலம்மையார் மனப்பான்மையோ வேறானது.

பக்தர்கள் தமக்குத் துன்பம் உண்டானால், இறைவன் அருள் நமக்குக் கிடைக்கவில்லை என்று எண்ணுவார்கள். யாரேனும் துன்புறுத்தினால், இறைவன் திருவருள் துணை இல்லாததனால் வந்த விளைவு' என்று நினைப்பார்கள். இன்பம் வருவது அருளால் என்றும்; துன்பம் வருவது தம் வினையால் என்றும் நினைத்து அழுங்குவார்கள்.

காரைக்காலம்மையார் அப்படி நினைப்பவர் அல்ல. அவர் இறைவனுடைய அருளையே துணைக்கொண்டு மெய்ப்பொருளை ஆராயும் நியமம் உடையவர். “எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள், மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்றபடி அருளாலே எவற்றையும் பார்க்கிறவர். அறிவாலே பார்ப்பது ஒன்று; அருளாலே பார்ப்பது வேறு ஒன்று; அறிவாலே பார்ப்பவர்க்கு வழி மட்டும் தெரியும்; அதற்கு மேல் அருளாலே பார்ப்பவர்களுக்கு அநுபவம் உண்டாகும்.

'அருளாலே எவையும்பார் என்றான்-அத்தை
அறியாதே கட்டிஎன் அறிவாலே பார்த்தேன்;