பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

கேட்டுக் களிக்கிறது. இந்தக் கற்பனைப் பொறிகளைத் தெளிவாகக் கனவிலே காணமுடிகிறது. கனவில் வரும் இன்ப துன்பங்கள் கற்பனையால் அமைந்த பொறிகளின் வாயிலாகத் தோன்றுகின்றன. மலரை மோந்து பார்ப்பது போலவும், திருடனுக்கு அஞ்சி ஓடுவது போலவும், ஒரு மலையைக் காண்பது போலவும் கனவிலே காண்கிறோம். அப்போது கண், கால் முதலிய உறுப்புக்கள் இருப்பதாகவே தோன்றுகிறது. அவ்வளவும் மனத்தின் கற்பனையே.

இந்த நிலையில் நுகரும் ஒன்றைத்தான் சூட்சும சரீரம் என்றும் நுண்ணுடல் என்றும் சொல்வார்கள். கனவிலே இன்ப துன்பங்களை நுகர்வது இந்த நுண்ணுடலே. பரு உடம்பை விட்டு இன்ப துன்பங்கள் உண்டு; சொர்க்கம் என்றும் நரகம் என்றும் கூறும் இன்பதுன்ப நுகர்ச்சிகளை அடைவது இந்தச் சூட்சும சரீரமே.

ஆகவே நாம் இன்பதுன்பம் என்று சொல்கிறவை பரு உடலோ, நுண்ணுடலோ ஏதேனும் ஒன்றின் வாயிலாகவே அநுபவிக்கப்படும். இந்த உடல்கள் அழிபவை. ஒரே மாதிரி இருப்பவை அல்ல. பொறிகளும் எப்போதும் ஒரே நிலையில் இருப்பவை அல்ல.

நோய் வந்தவனுக்கு நாக்குச் சுவையை உணர்வதில்லை. முதுமையை உடையவர்களுக்கு இந்திரியங்கள் வலிமையை இழந்து விடுகின்றன. இளமையில் அவர்கள் பெற்ற இன்பத்தை இப்போது நுகரமுடிவதில்லை. முன்பு இன்பமாக இருந்த சில இப்போது துன்பமாக இருக்கின்றன.

இப்படி அநுபவிக்கிற அநுபவங்கள் இன்பம், துன்பம் என்று இரண்டு வகையாக இருக்கின்றன. இரண்டும் கலந்தே வரும். ஒளியும் நிழலும் அடுத்தடுத்தே இருப்பதுபோல இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். இன்பத்துக்கு இனம் துன்பம். தனித் துன்பமே நுகர்வாரும் இல்லை; தனி இன்பமே நுகர்வாரும் இல்லை.