பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

ஆனால் வேறு ஒருவகை இன்பம் இருக்கிறது. அது துன்பம் என்ற இனமே இல்லாதது. குத்துவிளக்கை வைத்தால் ஒளியும், அந்த விளக்கின் நிழலும் தெரிகின்றன. கதிரவனிடம் ஒளியேயன்றி நிழல் ஏது? மரங்கள் முதலியவற்றின் நிழல்கள் இருக்கின்றனவே என்றால், அந்த ஒளியைத் தடுக்கும் பொருள்களின் நிழல்கள் அவையேயன்றிக் கதிரவனுடைய நிழல் அன்று அது. அதுபோல மனத்தால் அறியப்படும் இன்பத்துக்கு நிழல் போலத் துன்பம் இருந்தாலும், துன்பம் என்னும் நிழலே தோன்றாத இன்பம் ஒன்று உண்டு. அது நாம் நுகரும் சுக துக்கங்களுக்கு அப்பாற்பட்டது. அதைத்தான் சிவானந்தம், பிரம்மானந்தம், பரமானந்தம் என்றெல்லாம் பெரியவர்கள் சொல்வார்கள். அது உயிரினால் அநுபவிப்பதற்குரியது. இன்பம் துன்பம் என்பவை மனம் உள்ள எல்லைக்குள் அநுபவிப்பவை. அந்த எல்லையைக் கடந்துவிட்டால் இன்பமே அன்றித் துன்பம் இல்லை. அந்த எல்லையற்ற இன்பமே சீவன் முக்தர்கள் பெறும் இன்பம்.

அந்த இன்பம் புலனுகர்ச்சியாகிய இன்ப வகைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது; என்றும் மாறாதது. "வந்த பேரின்ப வெள்ளத்தில் திளைத்து மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்" என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் பெற்ற இந்தப் பேரின்பத்தைச் சேக்கிழார் சொல்வார்.

"கனியி னும்கட்டி பட்ட கரும்பினும்
பனிம லர்க்குழற் பாவைநல் லாரினும்
தனிமு டிகவித் தாளும் அரசினும்
இனியன் தன் அடைந் தார்க்கிடை மருதனே"

என்று அப்பர் சுவாமிகள் பாடுகிறார்.இந்தப் பாட்டில் முதலில் சொன்ன இனிய பொருள்கள் அத்தனையும் பொறிவாயிலாக நுகரப்படும் இன்பங்கள். மனத்தின் எல்லைக்குள் அகப்படாத இடைமருதனே பொறிகளும் மனமும் கடந்த நிலையில் நுகரப்படும் ஆனந்தமயப்பொருள். அப்படி உயிரில் இனிப்பவன் எம்பெருமான் என்பதை நன்கு உணர்ந்து அவனை நினைந்து,