பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

வந்து தலைகாட்டும். ஏதாவது இன்பத்தைப் புதிதாக நுகர்ந்தவன், பல பல எண்ணங்களுக்கிடையிலும் அந்த இன்பத்தையே நினைத்துக் கொண்டிருப்பான். தன் குழந்தையை இழந்த தாய் வெவ்வேறு எண்ணங்களில் ஈடுபட்டாலும் அடுத்தடுத்துக் குழந்தையை இழந்த எண்ணமே தலைதூக்கி நிற்கும். இறைவனிடம் ஈடுபட்ட அன்பர்கள் எதை எண்ணினாலும் இறைவனுடைய நினைப்பே மீதூர்ந்து நிலை பெற்றிருக்கும். ஒரு வீட்டுக்கு வருவார் போவார் பலர் இருந்தாலும் அங்கே வசிப்பவர்களே என்றும் தங்கியிருப்பார்கள். அதுபோல வெவ்வேறு நினைவுகள் மனத்திலே வந்து போனாலும் எதில் அதிக ஈடுபாடு இருக்கிறதோ அந்த எண்ணம் அடிக்கடி வரும்; மனத்தை விட்டுப் போகாது.

இறைவனிடம் முறுகிய அன்புடைய உள்ளத்தில் அவன் நினைவு நிலையாக இருக்கும். மனமென்னும் பெட்டியில் அந்த நினைவு என்றும் நீங்காத செல்வமாக, வைப்பாக இருக்கும். எத்தகைய இடையூறு வந்தாலும், எதை மறந்தாலும் இறைவனை அவர்கள் மறக்கமாட்டார்கள். அவனையே உள்ளத்திலே சேமித்து வைக்கும் வைப்பாகப் பற்றிக்கொண்டிருப்பார்கள்.

"எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்"

என்று சுந்தரர் பாடுகிறார். இறைவன் அவர் மனத்தில் வைப்பாகத் தன்னை வைத்தானாம். அதனால் எந்த நிலை வந்தாலும் அவனை மறவாமல் நின்க்கும் நிலையைப் பெற்றார் அவர்.

காரைக்காலம்மையாரும் அந்த நிலையில் உள்ளவரே. தமக்கு இனிய பொருளும் உலகத்துக்கே தலைவனுமாகிய ஈசனை அவர் தம் மனத்துள், எல்லாவற்றிலும் சிறந்த சேமிப்பாக, இனிய வைப்புப்பொருளாக வைத்தார்.

"எனக்குஇனிய எம்மானை ஈசனை யான்என்றும்,
மனக்குஇனிய வைப்பாக வைத்தேன்."