பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

இப்படிப் பலபடியாகச் சிதறுண்ட நினைவுகளிலே கிடந்து உழலுகிறது, நம் மனம். இதைத் திருத்த வழி இல்லையா?

பொல்லாத மாடு தன் மனம் போனவாறு ஒடி ஆடி அலைகிறது. பிறருடைய வயல்களுக்குச் சென்று பயிரை அழிக்கிறது. அதை அடக்க முடியவில்லை. கயிற்றில் கட்டினால் அறுத்துக்கொண்டு ஓடிவிடுகிறது. எந்தத் திசையில் அது ஓடும் என்று சொல்ல முடியாது.

ஒரு முளையை அடித்து நூறு கஜம் உள்ள கயிற்றை மாட்டின் கழுத்தில் கட்டி அந்த முளையோடு கட்டி விடுகிறோம். அப்போதும் அந்த மாடு எப்போதும்போல வேகமாக ஒடும். நூறு கஜம் உள்ள நீண்ட கயிறு ஆதலால் கட்டிப் போட்டதாக அதற்குத் தெரியாது. ஆனால் இப்போது ஓடும் அதன் ஓட்டத்துக்கும், முன்பு ஓடிய ஓட்டத்துக்கும் வேறுபாடு உண்டு. முன்பு அது ஒழுங்கில்லாமல் கண்ட கண்ட இடங்களிலெல்லாம் வேகமாக ஓடித் திரிந்தது. இப்போதும் அதே வேகத்தோடு ஓடினாலும் முளையைச் சுற்றி வட்டமாகவே ஒடும். ஒரு தடவை வட்டமடித்தால் கயிறு அந்த முளையில் ஒரு சுற்றுச் சுற்றிக் கொள்ளும். அந்த அளவுக்குக் கயிற்றின் நீளம் குறையும். அது வேகமாகச் சுற்றச் சுற்றக் கயிற்றின் நீளம் குறைந்து கொண்டே வரும். மாடு முளையை நெருங்கிக் கொண்டே வரும். கடைசியில் முளையும் கயிறும் கழுத்தும் ஒன்றுபட்டு அசைய முடியாத நிலை உண்டாகி விடும்.

மனத்தை வசப்படுத்துவதற்கு இதைப் போல ஒரு காரியம் செய்யவேண்டும். இறைவனென்னும் முளையை நட்டு அன்பு என்னும் கயிற்றினால் மனத்தைக் கட்டிவிட வேண்டும். அப்போது மனம் எப்படிச் சுற்றிலும் இறைவனுடைய எண்ணத்தை மறக்காது. முன்பு போலப் பல வகைத் தொழிலில் ஈடுபட்டாலும் எல்லாவற்றிலும் இறைவனுடைய தொடர்பை உண்டாக்கிக் கொள்ளும். இவ்வாறு அமைந்த பிறகு என்ன நடக்கும்?