பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

படிப்படியாக முன்னேறியவர். அவ்வாறு அவர் நிலைகளை, ஏறிய படிகளை, சொல்கிறார். எல்லாவற்றிலும் ஒன்றையே நினைந்திருக்கும் பாங்கு முதல் நிலை.

“ஒன்றே நினைந்திருந்தேன்"

என்று தொடங்குகிறார்.

கூலி வேலை செய்து பிழைக்கும் பெண் ஒருத்தி அருமையாக ஒரு குழந்தையை பெறுகிறாள். அதற்குப் பால் கொடுத்து விட்டு வேலைக்குப் போகிறாள், அவள் தன் வாழ்க்கைக்குரிய பொருளைத் தேடவே அந்த வேலையைச் செய்கிறாள். ஆனாலும் 'குழந்தைக்கு நடுப்பகலில் பசிக்குமே; அப்போது நாம் போக வேண்டும்' என்ற நினைப்பு அவளுக்கு இருந்துகொண்டே இருக்கும். அந்த நேரம் அணுகினால் அவசர அவசரமாகச் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து முடிப்பாள். அவள் நினைவெல்லாம் குழந்தைக்குப் பாலூட்டும் செயலிலேயே இருக்கும்.

அப்படியே இறைவனுக்கு ஆளாகவேண்டும் என்ற நினைப்பு எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. அம்மையார் வேறு வேறு செயல் செய்தாலும் அவற்றிலே மனம் ஈடுபடாமல் ஆளாகும் திறத்தை எண்ணிக் கொண்டிருக்கிறார். தம்முடைய லட்சியம் இன்னதென்று தீர்மானம் செய்துகொண்டவராதலின் அதையே நினைந்து கொண்டிருக்கிறார்.

நாம் செய்யும் காரியங்களில் உடனுக்குடன் பயன் தருபவை சில. அந்தப் பயனைக் கருதியே காரியங்களைச் செய்கிறோம். என்றாலும் அதுவே முடிந்த பயனாகாது. அந்தப் பயனும் நம்முடைய லட்சியத்தை அடைவதற்கு உதவியாக இருக்க வேண்டும். பசிக்கிறது; உண்ணுகிறோம். உண்ணுவது பசி தீருவதற்காகத்தான். பசி தீர்ந்தால் உடல் வலிமை பெறும். வலிமை பெற்றால் உழைக்க இயலும். உழைத்தால் பொருள் வருவாய் கிடைக்கும். அதனால் நன்றாக வாழலாம்.