பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

இறைவனுக்கு ஆளாகவேண்டும் என்ற லட்சியத்தையே எப்போதும் நினைத்த நிலை இப்போது உறுதிப்படுகிறது. அது தான் லட்சியம் என்ற துணிவு உண்டாகிறது. அதை அடையும் வழியில் குறுக்கிடும் எண்ணம் எதுவானாலும் அதனின்றும் விலகி நிற்கும் இயல்பு உண்டாகிறது. லட்சியத்தையே உறுதியாகக் கடைப்பிடித்துத் துணிந்து, அதற்கு வேறுபட்டவற்றினின்றும் ஒழிந்து நிற்கும் நிலை இது.

ஒரு பொருளைப் பெற வேண்டும் என்ற விருப்பம் ஒருவனுக்குப் பிறக்கிறது. அது கிடைத்தற்கரிய பண்டம். அவன் எங்கே சென்றாலும் அதையே தேடுகிறான்; அதைப் பற்றியே விசாரிக்கிறான். பிறகு அதைக் காணுகிறான். ஆனல் வேறு பல கவர்ச்சிப் பொருள்களோடு அது இருக்கிறது. அதைக் கண்டவுடன் அதுதான் தனக்கு வேண்டுமென்று துணிந்து, மற்றவற்றில் மனம் செல்லாமல் நிறுத்துகிறான். நாடியதைக் கண்டு, மற்றவற்றை விரும்பாமல் ஒழிகிறான். பிறகு அந்தப் பொருளைப் பெற்றுப் பாதுகாப்பான இடத்தில் வைத்துப் பேணுகிறான். ஒன்றையே விரும்பி நாடியது முதல் நிலை. பலவற்றின் நடுவே அதைக் கண்டபோது மற்றவற்றை விலக்கி, அதனையே துணிந்து நாடியது இரண்டாவது நிலை. பிறகு அதைப் பெற்றுப் பாதுகாப்பது மூன்றாவது நிலை.

காரைக்காலம்மையார் ஒன்றே நினைந்திருந்த நிலையைச் சொல்லி, ஒன்றே துணிந்தொழிந்த நிலையைச் சொல்லி மூன்றாவது நிலையையும் சொல்கிறார். 'நான் என்றும் நினைத்து, பிறவற்றை ஒதுக்கி, பிறகு அதனையே என் உள்ளத்துக்குள் பொதிந்து வைத்தேன்' என்கிறார்.

“ஒன்றேஎன் உள்ளத்தின் உள்ளடைந்தேன்.”

பல பல எண்ணங்கள் வந்தாலும் ஒன்றையே மீட்டும் மீட்டும் நினைத்தது முதல்படி. அந்த நினைப்பை உறுதியாக்கி மற்றவற்றை ஒதுக்குவது இரண்டாவது படி. முதல் நிலையில் சங்கற்பமும் இரண்டாம் நிலையில் போராட்டமும் இருக்கும். துணிவதும், மற்ற எண்ணம் வந்தால் அவற்றை ஒழிப்பதும்