பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

போராட்டந்தானே? மற்ற எண்ணங்கள் ஒழிந்து விட்டால் அமைதி பிறக்கிறது. நினைவாக இருந்தது துணிவாக மாறி அந்தத் துணிவே அநுபவமாக மாறுகிறது. உள்ளத்தின் உள் அடைத்தது, சலனமின்றி உள்ளே அடைந்து கிடக்கும்; சாந்தி உண்டாகும். அதுதான் இன்பம். அந்த நிலையையே "உள்ளத்தின் உள்ளடைத்தேன்” என்கிறார் அம்மையார்.

இதுவரையில் ஒன்றே நினைத்திருந்தேன், ஒன்றே துணிந்தொழிந்தேன், ஒன்றே என் உள்ளத்தின் உள்ளடைத்தேன்’ என்றவர் அந்த ஒன்று இன்னதென்று சொல்லவில்லை. அதை இறுதியில் சொல்கிறார். நம்முடைய ஆவலைத் தூண்டி விடுகிறார். அந்த ஒன்று எது தெரியுமா?

ஒன்றே காண்

இறைவனுக்கு ஆளாவதையே அவர் குறிப்பிடுகிறார். மனம் அமைதி பெற்று இன்புறுவதற்குரிய அடிமை நிலை என்றால் அதற்குக் காரணம் அடிமையின் இயல்பு அல்ல. யாருக்கு அடிமையாகிறாரோ அவருடைய சிறப்பினால், கருணையினால் அந்த இன்ப நிலை வருகிறது. ஆண்டவன் செய்யும் பேரருளே அடியாருக்கு இன்பமாக மலர்கிறது. ஆகவே தாம் யாருக்கு ஆளானார் என்பதைச் சொல்ல வருகிறார். சிவபெருமான் என்று சும்மா சொன்னால் போதுமா? அவன் பெருமை என்ன? சொல்ல வேண்டாமா?

அவனை மூன்று அடையாளங்களைச் சொல்லி இனம் கண்டு கொள்ளச் செய்கிறார்.

"கங்கையான், திங்கட் கதிர்முடியான், பொங்கொளிசேர்
அங்கையான்.”

என்கிறார். அவன் கங்கையை முடியில் அணிந்திருக்கிறான். சந்திரனைத் தரித்திருக்கிறான், கையில் அனலை ஏந்தியிருக்கிறான், இந்த அடையாளங்களை ஏன் சொன்னார்?