பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77


திருவடியால் தேய்க்கப் பெற்றவன். இறைவனுடைய திருவடித் தொடர்பு உண்டானதால் திருமுடியில் ஏறும் நிலையை உடையவனானான். எவ்வளவு குறைகள் உடையவனானாலும் அவற்றைப் பாராமல் அவனைத் தூயனாக்கி ஆட்கொள்ளும் அருளாளன் இறைவன். அவன் தூய்மை பெறுதலாவது தேய்வதும் வளர்வதும் இன்றி, பிறையாக இருப்பதனால் களங்கம் இன்றி இருத்தல்.

தன்னையே நினைத்தவருக்குப் பிறவற்றை எண்ணிச் சலனமடையாமல், தளர்ச்சியும் கிளர்ச்சியும் இல்லாமல், இருக்கச் செய்யும் நிலையைத் தருவான் இறைவன் என்ற குறிப்பு இதனால் பெறப்படும். ஒன்றையே துணிந்து பிறவற்றை ஒழித்து நிற்கும் நிலையை அருள்பவன்' சிவபெருமான்.

இறைவன் திருக்கரத்தில் உள்ள கனல் எல்லாவற்றையும் எரித்து ஒளிமயமாய் விளங்குவது. 'பொங்கொளி சேர்அங்கையான் அவன். மனத்திலுள்ள மாசை எல்லாம் ஒழிந்து ஞான ஒளி வீச, உயர்ந்த இன்ப நிலையை அடையச் செய்பவன் அமன் என்ற குறிப்பை இந்த அடையாளம் காட்டுகிறது. உள்ளத்தின் உள் அடைப்பதால் அஞ்ஞானம் நீங்கி ஒளிவிடும் நிலை உண்டாகிறது. அந்த நிலையை, அருள்பவன் இறைவன் என்ற குறிப்பை இந்தத் தொடர் காட்டுகிறது.

“இத்தகைய சிவபெருமானுக்கு ஆளாகும் அதுவே நான் இதுகாறும் கூறிய ஒன்று” என்று முடிக்கிறார் காரைக்கால் அம்மையார்.

“ஒன்றே நினைந்திருந்தேன்,'ஒன்றே துணிந்தொழிந்தேன்;
ஒன்றேஎன் உள்ளத்தின் உள்அடைந்தேன்; ஒன்றேகாண்;
கங்கையான், திங்கட் கதிர்முடியான், பொங்கொளிசேர்
அங்கையாற்(கு) ஆளாம் அது."