பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84


எத்தகைய தலைவன் என்பதை நான் அறிந்திருக்கவில்லை; அவனுக்கு ஆளாவது எப்படி என்றும் தெரிந்து கொள்ளவில்லை. அவனுடைய திருவருளுக்கு ஆளான பிறகு இவை விளங்குகின்றன. அவன் எத்தகைய தலைவன் எவ்வளவு ஆவலுடன் நம்மை ஆட்கொள்ளக் காத்திருக்கிருன் என்ற உண்மையும் இப்போது தான் தெரிய வருகிறது' என்று காரைக்காலம்மையார் சொல்கிறார்.

"அதுவே பிரானாமாறு ஆட்கொள்ளுமாறும் அதுவே
இனிஅறிந்தோம்."

[இனி - இப்பொழுது; அவனால் ஆட்கொள்ளப்பட்ட இப்பொழுது.]

"நான் அறிந்தேன் என்றா சொன்னேன்? அவன் தகுதி, நான் அறிந்த இவற்றுக்குள்ளே அடங்கிவிடுமா? இதுகாறும் அறிந்து கொள்ளாதவற்றை அறிந்து கொண்டேன் என்பது உண்மை. அவனைப்பற்றிய இயல்புகள் அறிந்து கொண்டேன். அவன் தலைவனாகும் வண்ணமும் நம்மை ஆளாக்கும் வண்ணமும் தெரிந்து கொண்டேன். இதனால் அவனை முற்றும் தெரிந்து கொண்டது ஆகிவிடுமா?

அம்மையார் சிந்திக்கிறார். இறைவன் தன்மை முழுவதையும் உணர்ந்தவர் யார்? 'தன்மை பிறரால் அறியாத தலைவா’ என்று மாணிக்கவாசகர் கூறினார். அவனைத் தலைவனாக எத்தனையோ அடியார்கள் உணர்கிறார்கள்: எல்லோரும் உணர்வது ஒரே வண்ணமாகவா இருக்கும்? அவரவர்கள் எந்த எந்த நிலையிலிருந்து உணர்ந்தார்களோ, அதற்கு ஏற்றபடி அவன் பிரானான வண்ணம் இருக்கும். அணைத்து ஆட்கொள்வதும் உண்டு. அடித்து ஆட்கொள்வதும் உண்டு. ஆகவே ஒருவர் உணர்ந்தபடியே யாவரும் உணர்ந்திருப்பார் என்று சொல்ல ஒண்ணாது.

உணவை உண்பதால் வயிற்றுப் பசி தீர்கிறது. பசி தீர்வதென்பது யாவருக்கும் பொதுவான அதுபவம். ஆனால்,